UPDATED : ஜூன் 26, 2011 12:00 AM
ADDED : ஜூன் 27, 2011 05:19 PM
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2011/counschph1.pdf மாணவர்கள் தாங்கள் கலந்து கொள்ள வேண்டிய கலந்தாய்வு தேதியைதெரிந்து கொள்ளலாம்.
கலந்தாய்வு தேதி குறிப்பிட்டு அழைப்புக் கடிதம் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவர்களுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணிற்கான தேதியன்று, தங்களது உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
அனுமதிக் கடிதம் கிடைக்கப் பெற்றால்தான் வர வேண்டும் என்று அவசியம் இல்லை.
அதேப்போல, மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்து மதிப்பெண் மாற்றி அமைத்த மாணவர்களும், தற்போதைய புதிய கட்-ஆப்பிற்கு ஏற்ற தேதியில் கலந்தாய்வில் பங்கேற்று, தங்களது புதிய மதிப்பெண்ணை பதிவு செய்து, விரும்பிய பாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வு அனைத்தும் சென்னை அண்ணா பல்கலையின் தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜுன் 30ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
கலந்தாய்வில் பங்கேற்பதற்கு முன்பே, மாணவர்கள் எந்த பாடப்பிரிவினை, எந்தக் கல்லூரியில் தேர்வு செய்யலாம் என்பது குறித்து தெளிவான முடிவுடன் பங்கேற்பது நல்லது.
கடந்த 24ம் தேதி பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.
மேலும், பிரிவுவாரியான தேதி விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. அந்த விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விபரம்:
1. விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 28 மற்றும் 29ம்(ஜுன்) தேதிகளில் நடைபெறுகிறது.
2. அதற்கடுத்து, விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் 30ம்(ஜுன்) தேதி நடக்கிறது.
3. தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1 முதல் 6ம் தேதி வரை 6 நாட்கள் நடக்கின்றன.
4. மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் ஜுலை 7ம் தேதி நடக்கிறது.
5. இதனையடுத்து பொது கவுன்சிலிங் ஜுலை 8ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
