UPDATED : ஜூன் 28, 2011 12:00 AM
ADDED : ஜூன் 28, 2011 12:22 PM
நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர், முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர்.
பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி சமீபத்தில் நிர்ணயம் செய்திருந்தது. இதனால், சில பள்ளிகளுக்கு மிகவும் கூடுதலாகவும், சில பள்ளிகளுக்கு மிகவும் குறைவாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. குறைவாக கட்டணம்
நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், இது தொடர்பாக முதல்வரிடம் முறையிட முடிவு செய்தனர். இதற்காக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள், நேற்று தலைமைச் செயலகம் வந்திருந்தனர். முதல்வரின் தனிப்பிரிவில், மனுக்களை அளிக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள், தனித்தனியாக மனுக்களை, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.
இவர்கள் கூறியதாவது: ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்துள்ள கட்டணம் போதுமானதாக இல்லை. இந்த கட்டணத்தை வைத்து பள்ளிகளை நடத்த முடியாது. எனவே, இதை ரத்து செய்து, கட்டணத்தை உயர்த்த வேண்டும். கோவிந்தராஜன் கமிட்டியும், ரவிராஜ பாண்டியன் கமிட்டியும், எந்த பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், அவற்றுக்கு உள்ள கடன்கள், வரிகள், பி.எப்., பிடித்தங்கள் போன்றவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
எனவே, பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போல, முத்தரப்பு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பெற்றோர், பள்ளி நிர்வாகிகள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட முத்தரப்பு குழுவை அமைத்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தற்போதைய நிலையில், எல்.கே.ஜி.,க்கு, 3,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, 5,500 ரூபாயாக உயர்த்த வேண்டும். மேலும், 6,400 பள்ளிகள் மேல்முறையீடு செய்ததில், 1,000 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை. புதிய பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கவில்லை. அவற்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதேபோல, தினமும் ஒவ்வொரு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் வந்து, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.
