UPDATED : ஜூன் 29, 2011 12:00 AM
ADDED : ஜூன் 29, 2011 10:26 AM
நாட்டிலேயே முதன் முறையாக பயிற்சி ராணுவ அதிகாரிகளுக்கான முதுநிலை பட்டய படிப்பு ஒன்றை, சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து பரங்கிமலை, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் துவக்கியுள்ளது.
சென்னை, பரங்கிமலையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி முடிக்கும் ராணுவ அதிகாரிகள், நேரடியாக ராணுவத்தில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஓ.டி.ஏ.,வில், 49 வாரம் பயிற்சி பெறும் ராணுவ அதிகாரிகளுக்கான, போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் அண்டு டிபன்ஸ் ஸ்டடிஸ் என்ற ஓராண்டு முதுநிலை பட்டய (டிப்ளமோ) படிப்பு நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி, ஆயுத பயிற்சியுடன், ராணுவத்தில் சிறப்பாக பணிபுரிய உதவும் வகையில் இப்பாட திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பட்டய படிப்பை துவக்கி வைத்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் கவுதம் பானர்ஜி கூறும்போது, டேராடூனில் செயல்பட்டு வரும் இந்திய மிலிட்டரி அகடமி சார்பில் சில படிப்புகள் உள்ளன. பல்கலைக் கழகத்துடன் இணைந்து முதுநிலை பட்டய படிப்பு துவங்குவது நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான். ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பல முதுநிலை பட்ட படிப்புக்களை படித்தாலும், இந்த ஓராண்டு பட்டய படிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
பயிற்சி முடித்து இந்திய ராணுவத்திற்குள் நுழையும் போதே, ராணுவத்திற்கு ஏற்ப அதிகாரிகளை இந்த பட்டய படிப்பு திறம்பட உருவாக்கும் என்று நம்புகிறோம்&' என்றார். சென்னை பல்கலைக் கழக பாதுகாப்பு துறை தலைவர் கோபால்ஜி மாலவியா கூறும்போது, ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துடன் இணைந்து துவங்கப்பட்ட இந்த புதிய படிப்பிற்கான அபிலியேட்டட் கட்டணத்தை சென்னை பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது என்றார்.
