UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 10:21 AM
* இக்கல்வியாண்டில் கலை அறிவியல் கல்லூரிகள் துவங்கி விட்டன. ஆனால், அவற்றில் புதிய பாடவகுப்புகள் துவங்க, கூடுதல் சீட்களுக்கு அனுமதி போன்றவை இன்னும் வழங்கப்படாமல் தாமதம் செய்யப்படுகிறது. இதற்கு தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் இப்பல்கலையின் கன்வீனர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் இவற்றிற்கான அனுமதியை நிறுத்தி வைக்கும்படியும், அனுமதிக்காக உயர்கல்வித்துறைக்கு விண்ணப்பிக்கும் படியும் கூறி விட்டுச் சென்றார். புதிய கல்லூரிகள் துவங்குவதற்கான அனுமதியை மட்டுமே உயர்கல்வித்துறை வழங்கும்.புதிய பாடவகுப்புகளுக்கு இணைவிப்பு, கூடுதல் சீட் போன்றவை பல்கலைக்கு உள்ள அதிகாரங்கள். அதை பறிக்கும் விதமாக உயர்கல்வித்துறை செயல் அமைந்துள்ளது. * இப்பல்கலையில் துணைவேந்தர் நியமிக்கப்படாததால் கன்வீனர் குழு நிர்வாகம் செய்கிறது.
* கல்லூரிகளில் கூடுதல் சீட், புதிய பாடவகுப்புகள் துவக்கத்திற்கு கன்வீனர் குழுவில் இடம் பெற்றுள்ள பிற 4 உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்த நிலையில் உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் அதைத் தடுத்து நிறுத்தியுள்ளார். கல்லூரிகளுக்கு ஏற்கனவே அனுப்பபட்ட அனுமதியையும் வாபஸ் பெறும்படி கடிதம் எழுத உத்தரவிட்டுள்ளார்.
* பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ஆக இருந்த பேராசிரியர் அழகப்பன் அப்பதவியில் இருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்டதை அடுத்து விலகினார். அவரது ராஜினாமாவும், அதே பதவியில் தேர்வாணையர் ராஜியக்கொடியை நியமித்து உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் உத்தரவுக்கு பிற கன்வீனர் குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. சிண்டிகேட் ஒப்புதலும் பெறப்படவில்லை.
* பல்கலை கல்லூரியின் முதல்வராக இருந்த மதனகோபால், தேர்தல் மூலம் சிண்டிகேட் உறுப்பினராக வெற்றி பெற்றார். கற்பககுமாரவேலின் துணைவேந்தர் பதவிக்காலத்திற்கு பின் பல்கலை வேந்தரான கவர்னர் ஒப்புதல் அளித்த கன்வீனர் குழுவிலும் அவர் இடம் பெற்றிருந்தார். ஆனால் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலக மதனகோபால் நிர்ப்பந்திக்கப்பட்டதால் ராஜினாமா செய்தார். இதற்கு கன்வீனர் குழுவின் பிற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலக நேரிட்டது. கன்வீனர் குழுவில் மாற்றமோ நீக்கமோ இருந்தால் பல்கலை வேந்தரின் ஒப்புதலையும், சிண்டிகேட் ஒப்புதலையும் பெறவேண்டும். இதை பற்றி எல்லாம் உயர்கல்வித்துறை செயலர் கவலைப்படவில்லை. இக்கல்லூரி முதல்வர் நியமனத்திற்கு சிண்டிகேட், கன்வீனர் குழு ஒப்புதலை பெற வேண்டும். ஜே.பாலன் என்ற இக்கல்லூரி ஆசிரியரை முதல்வராக நியமித்ததற்கும் எந்த ஒப்புதலையும் செயலர் பெறவில்லை.
* இப்பல்கலையில் நிர்வாகவியல். தொழில்முனைவோர், வணிகவியல் ஆகிய மூன்று துறைகளை ஒருங்கிணைத்து நிர்வாகவியல் புலம் (ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ்) அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூன்று துறைகளில் இருந்து ஒரு பேராசிரியர் இப்புலத்திற்கு தலைவராக நியமிக்கப்படுவார். இப்புலத்தில் இன்னும் ஓராண்டு தலைவராக இருக்க உள்ள பேராசிரியர் அழகப்பனை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு லஞ்சஒழிப்பு துறை, தணிக்கைத்துறை போன்றவற்றின் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் ஜெயராமனை அப்பதவியில் நியமித்து உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதற்கு கன்வீனர் குழுவின் பிற உறுப்பினர்களின் ஒப்புதலையோ, சிண்டிகேட் ஒப்புதலையோ அவர் பெறவில்லை. அதிலும் 2011 செப்டம்பர் மாதம் ஜெயராமன் பணி ஓய்வு பெறும் நாள். அவருக்கு இந்தாண்டு ஜூலை முதல் தேதியில் இருந்து 2 ஆண்டு பதவி வகிக்கலாம் என உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அரசு விதிகளுக்கு புறம்பாக அரசுச்செயலர் ஒருவர் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளாரோ தெரியவில்லை.
* ஐகோர்ட் தீர்ப்பையடுத்து குற்றச்சாட்டுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்கான பணம், பதவி பலன்களை அளிக்க பேராசிரியர் ஜெயராமன் கோரினார். அவருக்கு உடனடியாக இவற்றை வழங்க உயர்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டார். பல்கலைக்கு வந்த போது அவர் கோரிய முதல் பைலே இது தான் என பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
* பல்கலையுடன் இணைவிக்கப்பட்ட கல்லூரிகளில் முதல்வர் உட்பட பல்வேறு நியமனங்களுக்கான தேர்வுக்குழுவில் இடம் பெறும் உறுப்பினரை துணைவேந்தர் நியமிப்பார். துணைவேந்தர் இல்லாததால் கன்வீனர் குழு ஒப்புதலுக்கு அவை அனுப்பபட்டன. கன்வீனர் குழுவில் இடம் பெற்ற பிற 4 உறுப்பினர்களும் சிபாரிசு செய்திருந்த பெயரை உயர்கல்வித்துறை செயலர் கண்ணன் அடித்து விட்டு, பேராசிரியர் ஜெயராமன், இளைஞர் நலத்துறை இயக்குனர் செல்லதுரை பெயரையும் எழுதி, என் பிரண்ட்ஸ்களை நியமியுங்கள் என உத்தரவிட்டார். கன்வீனர் குழுவில் மெஜாரிட்டி உறுப்பினர்கள் ஒப்புதலை பற்றி உயர்கல்வித்துறை செயலர் கவலைப்படவில்லை.
* உயர்கல்வித்துறை செயலர் கண்ணன், இதே பல்கலையில் பேராசிரியர் ஜெயராமனின் வழிகாட்டுதலில் பிஎச்.டி., (டாக்டர்) பட்டம் பெற்றவர். குருபக்திக்கு தட்சணையாக இவர் தனது அன்பையும், மரியாதையையும் அவருக்கு காட்டலாம். அதை விடுத்து சலுகைகளையும், சட்ட மீறல்களையும் எப்படி வழங்கலாம் என பேராசிரியர்கள் பலர் கேட்கின்றனர்.
* இப்பல்கலையில் இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை விடுத்து தனிநபர் பழிவாங்கல்களுக்கு பல்கலையை பயன்படுத்துவது, இப்பல்கலையின் வளர்ச்சிக்கோ, மாணவர்களின் நலனுக்கோ உகந்ததாக அமையாது. இப்பல்கலையில் நடைபெறும் பல்வேறு விஷயங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரியவில்லை. இப்பல்கலையில் நடைபெறும் சட்டமீறல்களை தடுக்க முதல்வர் ஜெயலலிதா உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்கு உயர்கல்வியை காப்பாற்ற வேண்டும்.
