சட்டப் படிப்பில் சேர எஸ்.சி. பிரிவு மாணவர்கள் ஆர்வம்
சட்டப் படிப்பில் சேர எஸ்.சி. பிரிவு மாணவர்கள் ஆர்வம்
UPDATED : ஜூலை 07, 2011 12:00 AM
ADDED : ஜூலை 07, 2011 10:56 AM
ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு, அதிகபட்சமாக எஸ்.சி., பிரிவினர், 42.14 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியலில், இவர்களின் சதவீதம், 12.52 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், பொறியியல் மற்றும் சட்டம் ஆகிய இரு படிப்புகளிலும் எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பங்கு சொல்லும்படியாக இல்லை.
நடப்பு கல்வியாண்டில், மாநிலத்தில் உள்ள ஆறு சட்டக் கல்லூரிகளில் சேர, மொத்தம் 2,686 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு ஆகிய இரண்டிலுமே, பழங்குடியினர் பிரிவு மாணவர்கள், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் இருந்து, பொறியியல் படிப்பு சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 622 மாணவர்களில், எஸ்.சி., பிரிவினர் 12.52 சதவீதம் மட்டுமே. 17 ஆயிரத்து 928 பேர் மட்டுமே, இந்த பிரிவின் கீழ் விண்ணப்பித்தனர். இவர்களை விட, எஸ்.டி., பிரிவு இன்னும் குறைவாக இருந்தது. இந்த பிரிவில், வெறும் 481 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர்.
பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், பொறியியல் படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததற்கு பொருளாதார பிரச்னையே பிரதானமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம், இதரக் கட்டணங்கள் என்ற வகையில் ஆண்டுக்கு குறைந்தது 30 ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.
இந்த தொகையைக் கூட, கட்ட முடியாத நிலை பலருக்கு இருப்பதால், பொறியியல் படிப்புகளில் சேர எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை என்று, உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார சக்தி வாய்ந்த பிரிவினர் மட்டுமே, இந்த படிப்புகளை படிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது. அதே நேரத்தில், குறைவான கட்டணம் உள்ள சட்டப் படிப்புகளில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஐந்தாண்டு சட்டப்படிப்பில் சேர இடம் கிடைக்கும் மாணவர்கள், கவுன்சிலிங் கட்டணமாக 1,620 ரூபாய் ஒரு முறை செலுத்துவதுடன், கல்லூரியில் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு 1,205 ரூபாயும் (அனைத்துப் பிரிவினருக்கும்) செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
