UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 08, 2011 05:46 PM
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்களில், 50 சதவீத இடங்களை ஓ.சி. பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என, கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நேற்று முன்தினம் நடந்து முடிந்த எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சிலிங்கில், ஓ.சி., பிரிவுக்கு 35 சதவீத இடங்கள் தான் ஒதுக்கப்பட்டன. தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மீதமுள்ள 15 சதவீத இடங்களுக்கான கவுன்சிலிங்கை, வரும் 11ம் தேதி, மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு அலுவலகத்தில், காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில் பங்கேற்க, 27 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இப்பட்டியலில் இடம்பெற்றவர்களில், அழைப்புக் கடிதம் கிடைக்க பெறாதவர்களும், கண்டிப்பாக கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ்., இடங்களும் முதல்கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பி விட்டன.
இந்நிலையில், வரும் 11ம் தேதி, நடத்தப்படும் கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்கள், ஏதேனும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
