UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM
ADDED : ஜூலை 08, 2011 11:31 AM
மாணவர்களுக்கு, இலவச லேப்-டாப் எனப்படும், மடிக்கணினிகள் வழங்குவதில், தமிழக அரசு முனைப்பாக களமிறங்கியுள்ளது. இவற்றுக்கான டெண்டரில், விண்டோஸ் அல்லது லினக்ஸ் இயங்கு தளம், கேமரா, சேணி இணைப்பு (வை-பை), டி.வி.டி., குறுந்தட்டு பார்க்கும் வசதி, அலுவலகம் மற்றும் கல்வி தொடர்பான மென்பொருள் என, சந்தையில் கிடைக்கும் கணினிகளுக்கு இணையான வசதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதனை நினைத்து வியக்கும் நேரத்தில், இதில் உள்ள சில வசதிகள், மாணவர்களைத் தவறான பாதையில் வழிநடத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
நாகர்கோவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர் ஸ்டாலின் கூறியதாவது: இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியில், ஏராளமான வசதிகள் இருக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் நல்லெண்ணம் பாராட்டப்பட வேண்டியது தான். அதேசமயம், அதில் பல்வேறு தேவையில்லாத மற்றும் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வசதிகளும் இருக்கின்றன. மடிக்கணினியில், நிழற்படக் கருவி (வெப்-காம்) இருக்க வேண்டும் என, எல்காட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இக்கருவி மூலம், நிழற்படமும், நிகழ்படமும் எடுக்க முடியும்.
இணையதள வசதி மூலம், மறுமுனையில் பேசுபவரின் உருவத்தையும் காண முடியும். நம் உருவமும், அவர்களுக்குத் தெரியும். படிக்க வேண்டிய மாணவர்களுக்கு, இந்த வசதி எதற்கு? இதன் மூலம், சாட்டிங்கில் தான் அவர்களின் நேரம் விரயமாகும்.
வை-பை எனப்படும், சேணி இணைப்பும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இவ்வசதி கொண்ட பகுதிகளில், எந்த இணைப்பும் இல்லாமலே, இணைய தளங்களைப் பார்க்க முடியும். அடுத்த கணினியில் உள்ள தகவல்களைப் பெறுவது மட்டுமின்றி, இலவச மடிக்கணினியில் இருக்கும் தகவல்களையும், அடுத்தவர்கள் எடுத்துக் கொண்டு விட ஏதுவாகிவிடும்.
டி.வி.டி., ரைட்டர் தேவைப்பட்டால், பள்ளிக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் கொடுக்கலாம். அதன் மூலம், மாணவர்களுக்குத் தேவையான விவரங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மடிக்கணினியிலேயே இணைத்துக் கொடுப்பது, தவறுக்குத் தான் தூண்டுதலாக இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆசிரியை கல்யாணி கூறியதாவது: மாணவர்களுக்கு, நிழற்படக் கருவி வசதி தேவையே இல்லை. படிக்கும் வயதில், ஒருவரை ஒருவர் இணையதளம் வழியாக முகம் பார்த்து என்ன செய்யப் போகின்றனர்? இதன் மூலம், அடுத்தவர் மீது தான் கவனம் செல்லும்; படிப்பு பாதிக்கும். டி.வி.டி., ரைட்டர் வசதியும் இலவச மடிக்கணினியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், டி.வி.டி.,க்களைப் பார்க்கலாம். படிக்கலாம். பதிவிறக்கம் செய்யலாம்; பதிவேற்றலாம். மாணவர்கள், டி.வி.டி.,யில் என்ன பார்ப்பர் என்பதைச் சொல்லித் தர வேண்டுமா? எனவே, டி.வி.டி., ரைட்டரும் இருக்கக் கூடாது. இவ்வாறு கல்யாணி கூறினார்.
இதுகுறித்து கேட்டபோது, எல்காட் நிறுவனத்தின் உயரதிகாரி கூறியதாவது: தவறாகப் பயன்படுத்தப்படாத விஷயமே உலகத்தில் இல்லை. எதை வேண்டுமானாலும், எவர் வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம். ஒருவர், ஒரு விஷயத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பதாலேயே, அதை இல்லாமல் செய்துவிட வேண்டும் என நினைப்பது சரியல்ல. குக்கிராமங்களையும், இணைய வசதி எட்டிவிட்ட இந்தக் காலத்தில், டி.வி.டி., ரைட்டர், நிழற்படக் கருவி இல்லாமல் கொடுத்தால் கூட, இணையத்தின் மூலம் அந்த வசதிகளை, அவர்கள் பெற்றுவிட முடியும். வெறும், 250 ரூபாய் விலைக்கு கூட சந்தையில் நிழற்படக் கருவிகள் கிடைக்கின்றன. மடிக்கணினியில் எந்த வசதியும் வேண்டாம்; கையில் ஒரே ஒரு, பென் டிரைவ் இருந்தால் போதும்; எல்லா தவறுகளுக்கும் தளம் கிடைத்துவிடும்.
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஏற்கனவே கணினி மற்றும் மடிக்கணினிகளைக் கையாண்டு வருகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு ஏற்கனவே, மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லையே. மேலும், மடிக்கணினி பெறுபவர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள். எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்தறியும் பருவம் தான் இது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோரின் முறையான கண்காணிப்பும், கவனிப்பும் இருந்தால், எந்தக் குழந்தையும் தவறு செய்யாது. நாம் கண்மூடி இருந்துகொண்டு, பிள்ளைகளைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை. இவ்வாறு அந்த உயரதிகாரி கூறினார்.
வேலைக்கு ஓடும் பெற்றோர், பிள்ளைகளை கண்காணிக்க நேரம் இருந்தால் தானே. வெறும் மொபைல் போன்களினாலேயே படிப்பை இழந்து வாழ்க்கையைத் தொலைத்த மாணவர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
