தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இருபாலர்(ஆண்-பெண் சேர்ந்த) கல்விமுறையே சிறந்தது!

இருபாலர்(ஆண்-பெண் சேர்ந்த) கல்விமுறையே சிறந்தது!

இருபாலர்(ஆண்-பெண் சேர்ந்த) கல்விமுறையே சிறந்தது!


UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM

ADDED : ஜூலை 10, 2011 12:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2011 12:00 AM ADDED : ஜூலை 10, 2011 12:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஆண் மற்றும் பெண்களுக்கென்று தனியாக இருக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை இருக்க இருக்க சுருங்கி வருகிறது என்பதுதான் உண்மை. அதேசமயம், இருபாலர் படிக்கும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எத்தகைய கல்வி நிறுவனங்கள் நல்லது என்ற வாதமானது, சமூகத்தின் தேவையை கருத்தில் கொண்டு அமைய வேண்டும். அதுதான் பயன்தரக்கூடியது. ஏனெனில், மனித வாழ்வின் தேவையைக் கருத்தில் கொண்டுதான், ஒவ்வொரு காலத்தின் சமூக அமைப்பும் மாறிவருகிறது.


இது தாராள பொருளாதாரமயமாக்கப்பட்ட உலகம். படித்து முடித்து வேலை என்று போய்விட்டால், ஆண்-பெண் என்றெல்லாம் பார்க்க முடிவதில்லை. இரு பாலினரும் ஒருங்கிணைந்துதான் பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே அலுவலக சூழலுக்கு முந்தைய கல்விக்கூட சூழ்நிலையானது, பிற்கால வாழ்விற்கு தயார்செய்வதாய் இருக்க வேண்டும்.


பெண்களை தயக்கமின்றியும், கூச்சமின்றியும் கல்வி நிலையங்களுக்கு ஈர்க்க வேண்டும என்ற நோக்கத்தில், முன்பு, பெண்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டப்பட்டன. கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் என்ற மதிப்பீடுகளில் ஆண்களுக்கென்றும் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கட்டப்பட்டன. இருபாலருக்கும் தனித்தனியே இயங்கும் கல்வி நிலையங்களில் ஆண்களும், பெண்களும் முறையே, கூச்சமின்றி, தயக்கமின்றி, சுதந்திரமாக உணர்ந்து, தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி, தங்களின் சந்தேகங்களைப் போக்கிக்கொண்டு நன்மையடைகிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. இந்தக் கருத்தையும் நிராகரிக்க முடியாது.


ஆனால் பொதுவாக இதை தாண்டிய பல நன்மைகள் இருபாலர் கல்வி நிறுவனங்களில் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் பொதுவாக படிப்பு விஷயத்தில் மாணவர்களுக்கும்-மாணவிகளுக்கும் ஆரோக்கியமான போட்டி உருவாகிறது. எதிர்பாலினம் மீதுள்ள கூச்சமும், பயமும், தயக்கமும், தப்பான அபிப்ராயங்களும் அகலும். ஒரு புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உலகத்தின் இயல்பான தன்மையின்பால் பழக்கம் ஏற்படும். இருபாலர் கல்வி நிறுவனங்களில் பொதுவாக வகுப்பறையானது, ஆரோக்கியமான சவால் நிறைந்ததாகவும், துடிப்புடனும், கலகலப்பாகவும் இருக்கும். இத்தகைய சூழல்களே மாணவர் பருவத்திற்கு ஏற்றது.


கல்லூரிப் படிப்பு வரை ஒருபாலர் கல்வி நிறுவனங்களிலேயே படித்தவர்கள், நிறுவனங்களில் பணிபுரிய செல்லும்போது, எதிர்பாலினரிடம் பழக வேண்டியுள்ளது மற்றும் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியுள்ளது. ஒரு பாலின பள்ளியில் படித்தவர்கள் இதுபோன்ற சூழல்களை சமாளிக்க ஆரம்பத்தில் தடுமாறுகின்றனர். சிலர் சில மாதங்களிலேயே மாறுபட்ட சூழலுக்குப் பழகி விட்டாலும், சிலருக்கு அதிக காலம் பிடிக்கிறது. இருபாலின கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், பொதுவாக, இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்வதில்லை.


மேலும், ஒரு பள்ளியை தேர்வுசெய்வதில், அப்பள்ளிக்கு இருக்கும் புகழும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பெண்களுக்கான கல்வி நிறுவனமோ அல்லது ஆண்களுக்கான கல்வி நிறுவனமோ, நல்ல புகழுடன் இருந்தால் அங்கே தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்குவதில்லை. எனவே இதுபோன்ற காரணங்களாலும் இருபாலினர் சேர்ந்து பயிலும் கல்வி பலருக்கு கிடைப்பதில்லை. ஒரே பாலினர் சேர்ந்து படிக்கும் கல்வியை விட, இரு பாலினர் சேர்ந்து படிக்கும் கல்வியில் சுவாரஸ்யம் அதிகம். அறிவுப் பகிரல் அதிகம் இருக்க வாய்ப்புண்டு.


இருபாலின கல்வி நிலையங்களில் சேர்த்தால், தங்கள் பிள்ளைகளின் கவனம் சிதறி, அவர்கள் வழிதவறக் கூடும் என்று பல பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், பிள்ளைகளுக்கு உண்மையான வழிகாட்டு நெறிமுறைகள் வீடுகளில்தான் கிடைக்கிறது. வீடுகளில் முறையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள், பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ தடம் புரள்வதில்லை. ஒருபாலின கல்வி நிறுவனங்களில் படிக்கும் பல மாணவ-மாணவியர் வழிதவறும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. அத்தகைய மாணவர்களுக்கு அடிப்படை நெறிமுறைகள் கிடைக்காததே காரணம். எனவே பெற்றோர்கள் இதுவிஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.


ஆணும்-பெண்ணும் சேர்ந்து பயில்வது வாழ்வின் இயல்பை புரிந்து கொள்வதற்கும், எதிர்கால சவால்களை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், நட்புணர்வை வளர்த்துக் கொள்வதற்கும், படிப்பில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்துக் கொள்வதற்கும்தான். இதில் பிரச்சினைகளுக்கு இடம் தரக்கூடாது. மனித வாழ்வு மட்டுமல்ல, உலகில் அனைத்து உயிர்களுமே ஆண்-பெண் இணைந்த அம்சத்தையே வாழ்வாக கொண்டுள்ளன. அதுதான் இயற்கையின் நியதி. வாழ்வின் சம்பவங்கள் அனைத்துமே, ஆண்-பெண் இணைந்ததாக இருக்கையில், கல்வியில் மட்டும் அவர்கள் இருவரையும் பிரித்து வைப்பது முறையா? என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us