திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ மாணவ சேர்க்கை செல்லாது
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ மாணவ சேர்க்கை செல்லாது
UPDATED : ஜூலை 12, 2011 12:00 AM
ADDED : ஜூலை 12, 2011 02:28 PM
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பதிவாளர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், 2009-10ம் கல்வியாண்டில் திருச்சியில் மருத்துவக் கல்லூரி துவக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவக் பல்கலைக்கழகத்தின் அனுமதி கடிதத்தைப் பெற்று மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தோம். அதன்படி, மத்திய அரசு திருச்சியில் மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி அளித்தது. அந்த அனுமதி கடிதத்தில், புதிய கல்லூரி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரி என்று குறிப்பிடவில்லை.
இதனால், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரி என்று கருதி 2009-10ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையைத் துவங்கி 150 மாணவர்களை சேர்த்துவிட்டோம். அதன்பிறகு இந்திய மருத்துவக் கவுன்சில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரி என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
இதனால் 150 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அந்தக் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி பி. ராஜேந்திரன் தனது தீர்ப்பில், இந்த வழக்கின் முக்கியக் கேள்வியே 150 மாணவர்களின் நிலை பற்றியதுதான். அந்த மாணவர்கள் 2 ஆண்டுகளை முடித்துவிட்டனர். மிகுந்த கனத்த மனதுடன் இந்த தீர்ப்பை அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். மாணவர்களின் சேர்க்கை சட்டவிரோதமாக இருக்கும் போது எந்த வித கருணையும் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் கடுமையான தவறை செய்துள்ளது. இதனை அனுமதித்தால் நாளை இதேப்போன்று மாணவர்களை சேர்த்துவிட்டு காலம் கடந்து விட்டது கருணை காட்டுங்கள் என்று பல கல்லூரிகள் நீதிமன்றத்தில் நிற்பார்கள். இந்திய மருத்துவக் கவுன்சிலும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும் செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கவலைக்குறியதே.
திருச்சி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட 150 மாணவர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் தற்போது எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கையில் தான் உள்ளது. பல்கலைக்கழகம் தான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் விஷயத்தில் நீதிமன்றம் எதுவும் செய்ய இயலாது. இந்திய மருத்துவக் கவுன்சில் மாணவர்களின் எதிர்காலத்தை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
