UPDATED : ஜூலை 22, 2011 12:00 AM
ADDED : ஜூலை 22, 2011 05:40 PM
விடுமுறை முடிந்து கல்லூரிகள் துவங்கும்போது, புதிதாக சேர்ந்த மாணவர்களை, அங்கு ஏற்கனவே படிக்கும் மாணவர்கள் விளையாட்டாக செய்யும் ராகிங் என்பது, பல்வேறு அசம்பாவிதங்களாக மாறியது.
இதனால் ராகிங்கை தடுக்கும் நடவடிக்கைகளை கல்லூரிகள் எடுத்தன. ராகிங் என்பது சட்டப்படி குற்றம் என்ற அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்து விட்டது, இரண்டாவது கட்ட கலந்தாய்வு விரைவில் துவங்க உள்ளது.
முதல் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ சேர்க்கை பெற்ற மாணவர்கள் ஜுலை 22ம் தேதியன்று அந்தந்த கல்லூரிக்குச் சென்று சேர்ந்து கொள்ள வேண்டும்.
மருத்துவக் கல்லூரிகளில்தான் மிகக் கொடுமையான ராகிங்கள் நடந்துள்ளன. மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ராகிங்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் வம்சதாராவுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்தே தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
