UPDATED : ஜூலை 26, 2011 12:00 AM
ADDED : ஜூலை 26, 2011 12:59 PM
அண்ணா பல்கலை, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நடத்துகிறது.
இதில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜுலை 8ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் இருந்த 4554 மொத்த இடங்களில் இதுவரை 4486 இடங்கள் நிரம்பிவிட்டன. ஜுலை 26ம் தேதி கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் வெறும் 68 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. அதில் எம்.பி.சி. பிரிவினருக்கு எஸ்சிஏ பிரிவினருக்கு 32 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 16 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 20 இடங்களும் உள்ளன.
இதில் பெரும்பான்மையான இடங்கள் இன்றைய கலந்தாய்வில் நிரம்பிவிட வாய்ப்பு உள்ளது. ஒரு சில காலியிடங்களே மீதமிருக்கலாம். அதன்பின்னர் வரும் மாணவர்கள், அண்ணா பல்கலையிலோ அல்லது சுயநிதி பொறியியல் கல்லூரிகளில்தான் பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
இதுவரை அண்ணா பல்கலையில் 5986 இடங்கள் நிரம்பிவிட்டன. இன்னும் 1599 இடங்களே காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 32919 இடங்கள் நிரம்பி, இன்னும் 1,01,588 இடங்கள் காலியாக உள்ளன.
