இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு 28ம் தேதி துவக்கம்
இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வு 28ம் தேதி துவக்கம்
UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM
ADDED : ஜூலை 27, 2011 04:55 PM
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில், தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்களில் 1648 இடங்கள் நிரப்பப்பட்டன. டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான 670 இடங்களில், 71 இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ் இடங்களில், 13 இடங்களும் நிரப்பப்பட்டன.
எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில், காலியாக உள்ள 5 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் மீதமுள்ள 599 இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 72 பி.டி.எஸ்., இடங்கள் மற்றும் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், துவங்கி, அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என, மருத்துவக் கல்லூரி கூடுதல் இயக்குனர் ஷீலா கூறினார்.
திருச்சியில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான, இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. சென்னையில், மாதா மருத்துவக் கல்லூரி இந்த ஆண்டு துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு கல்லூரிகளிலும், அரசு ஒதுக்கீட்டில், 150 இடங்கள் உள்ளன. இதையடுத்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் துவக்கத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான காலியிடங்கள், 749 ஆக உயரும் என தெரிகிறது.
