அரசு பள்ளிகளிலாவது சமச்சீர் கல்வி முறை -வழக்கறிஞர் வாதம்
அரசு பள்ளிகளிலாவது சமச்சீர் கல்வி முறை -வழக்கறிஞர் வாதம்
UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 12:07 PM
தமிகத்தில் இந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். செளஹான் முன்பு விசாரணை நடைபெற்றது.
5வது நாளாக புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஆசிரியர்கள் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், "சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்தினால் 90 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயடைவார்கள். அவர்களுக்காக இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அரசு பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். மீதமிருக்கும் தனியார் பள்ளிகளில் பழைய பாடத்திட்டங்களையே இந்த கல்வியாண்டில் பின்பற்றிக் கொள்ளலாம். அடுத்த ஆண்டில் சமச்சீர் கல்வியில் மாற்றங்களை செய்து தமிழக அரசு அமல்படுத்தலாம்" என்று வாதாடினார்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாதம் முடிந்த பிறகு, எதிர்தரப்பு வாதங்களுக்கு பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ், "சமச்சீர் கல்விக்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படவில்லை என்பதால் இந்த ஆண்டு அமல்படுத்தவில்லை.
மாநில அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமானதாக உள்ளதா என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திடம் ஒப்புதல் பெறவில்லை.
அவசர கதியில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக கல்வித் துறை ஒரே நாளில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சமச்சீர் கல்வி புத்தகங்கள் தேசிய தரத்துக்கு இணையாக இல்லை என்று உறுதியாகிவிட்டது.
எனவே, தரமான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகளை உருவாக்கிய பிறகு தமிழகத்தில் சமச்சீர் கல்வியை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும்" என்று வாதிட்டார்.
தமிழக அரசின் வாதம் வியாழக்கிழமையும் தொடர்கிறது. "வாதத்தை வியாழக்கிழமையுடன் முடித்துக் கொள்ளுமாறு" உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
