UPDATED : ஆக 04, 2011 12:00 AM
ADDED : ஆக 04, 2011 03:26 PM
கடந்த 2010 ஜுலை மாதத்திற்கும், 2011 ஜுன் மாதத்திற்கும் இடைபட்ட காலகட்டத்தை, அதே நிலையில், அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கான, மாணவர்களின் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை 63% குறைந்துள்ளது. அதேசமயம், அமெரிக்க துணைத் தூதரகத்தில், 2010 அக்டோபர் முதல் 2011 ஜுன் வரையான காலகட்டத்தில்(அதே காலகட்டத்தின் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில்) விசா விண்ணப்பங்கள் 20% அதிகரித்துள்ளன.
அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிக்கையில், ஆஸ்திரேலியாவிலோ, அந்த எண்ணிக்கையில் பாதியளவே இருக்கிறார்கள். கடந்த 2008-09 ஆண்டுகளில் 67,141 என்ற அளவில் இருந்த வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 2010-11ம் ஆண்டில் வெறும் 6,875 என்ற அளவில் சுருங்கிவிட்டன.
ஆஸ்திரேலியாவில் அதிக மாணவர் எண்ணிக்கையை பெற்றிருப்பதில், உலகிலேயே முதலிடத்தில் இருந்த இந்தியா, அந்த இடத்தை சீனாவிடம் இழந்து இரண்டாமிடத்திற்கு வந்தது. பின்னர், அந்த இடத்தையும் அமெரிக்காவிடம் இழந்து, மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்கு படிப்பதற்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்களில், வெறும் 49.6% மாணவர்களுக்கு மட்டுமே 2011ம் ஆண்டில் விசா வழங்கப்பட்டது. மேலும் 2009-10ம் ஆண்டில், அனுமதி பெற்றவர்களின் சதவீதம் 46.7% என்ற அளவிற்கு குறைந்துவிட்டது.
இந்தியர்களுக்கு, அமெரிக்காவால் வழங்கப்படும் குடியேற்ற நோக்கமற்ற விசாக்களின்(மாணவர் விசாக்கள் உட்பட) எண்ணிக்கை, கடந்த 2009 வருவாய் ஆண்டில் 4,99,686 என்ற அளவிலிருந்து 2010ம் ஆண்டில் 5,28,286 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில், அமெரிக்காவில் இருந்த விசா நடைமுறைகள், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு, மாணவர்கள் அதிகளவில் செல்ல காரணமாகின. ஆனால் சமீப காலங்களில், ஆஸ்திரேலியாவில், இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், அந்நாட்டின் மீதான ஆர்வத்தைக் குறைத்து, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளின் மீதான ஆர்வத்தை மீண்டும் அதிகரித்துள்ளன.
