ஐ.டி. துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கான பணி நிலைகள்
ஐ.டி. துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கான பணி நிலைகள்
UPDATED : ஆக 05, 2011 12:00 AM
ADDED : ஆக 05, 2011 10:26 AM
இன்றைய வர்த்தக உலகின் அனைத்துத் துறைகளிலும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் வணிகத் துறைகளில் இ-காமர்ஸ் துறையும் ஒன்றாகும். இத்துறைக்கு இன்பர்மேஷன் டெக்னாலஜி அறிவும், வர்த்தக திறனும் உள்ள நபர்கள் தேவைப்படுகிறார்கள். இன்பர்மேஷ்ன் டெக்னாலஜியில் மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதமாக இந்த ப்ரோகிராம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஐ.டி. துறையைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் திறன் ஆகிய இரண்டும் இருக்க வேண்டும்.
இன்பர்மேஷன் டெக்னாலஜி என்பது, மென்பொருள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி, தகவல்களை நிர்வகிப்பதாகும். இதை மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சர்வீசஸ் என்று சில நிறுவனங்களும், இன்பர்மேஷன் சர்வீசஸ் என்று சில நிறுவனங்களும் குறிப்பிடுகின்றன. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும், இன்பர்மேஷன் டெக்னாலஜி துறையானது, தகவல்களை சேகரித்தல், தகவல்களை செயல்படுத்தல், தகவல்களைப் பாதுகாத்தல், தகவல்களை கடத்துதல், தேவைக்கேற்ப தகவல்களை பெறுதல் போன்ற செயல்களுக்கு முழுப் பொறுப்பேற்கிறது.
ஐ.டி. துறைக்கு தேவைப்படும் பணிகளை செய்ய, அத்துறையானது, கணினிகள், சர்வர்கள், டேட்டாபேஸ் நிர்வாக அமைப்புகள், கிரிப்டோகிராபி போன்ற அம்சங்களைப் பயன்படுத்துகிறது. மேலும் இந்த துறையில் பல சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு இன்பர்மேஷன் டெக்னாலஜி மேலாளர் இருப்பார்கள். இந்தத் துறைக்கு, பொதுவாக, முதன்மை தகவல் அதிகாரி பொறுப்பு வகிக்கிறார்.
இதுதவிர, இன்னபிற பணிநிலைகளின் வகைகள்:
கணினி வன்பொருள் விற்பனை பிரதிநிதி
வாடிக்கையாளருக்கும், விநியோகிப்பாளருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு, இருதரப்பாரின் தேவைகளையும் நிவர்த்தி செய்கிறார். கணினி வன்பொருளின் தொழில்நுட்ப செயல்முறைகள் அனைத்தையும் ஒரு வாடிக்கையாளருக்கு தெளிவாகக் கூறி, அவரின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
கணினி மென்பொருள் விற்பனை பிரதிநிதி
மென்பொருளின் விற்பனைக்கு முந்தைய, விற்பனையின் போதான மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்கு இவர் பொறுப்பேற்கிறார். மென்பொருள் விற்பனைத் தன்மையானது, நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபடும். சில நிறுவனங்கள், தரமான தயாரிப்புகளை பல பெரியளவிலான வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றன. மாறாக, சில நிறுவனங்களோ, தனிநபர்களுக்கான வழக்கமான மென்பொருள்களை விற்பனை செய்கின்றன.
கணினி மற்றும் தகவல் அமைப்புகள் மேலாளர்
அவரவர் பணியாற்றும் நிறுவனங்களில் ஏற்படும் ஐ.டி. தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது இவர்களின் பொறுப்பாகும். மேலும் கணினி தொடர்பான நடவடிக்கைகளை திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது மற்றும் ஆராய்ச்சியை வழி நடத்துவது போன்ற செயல்களை இவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற துறை மேலாளர்களுடன் கலந்தாலோசித்து, நிறுவனத்தின் இலக்குகளை தீர்மானித்து, அத்தகைய இலக்குகளை அடைவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் இவரின் பணி.
டெக்னிக்கல் ரைட்டர்
சில விஷயங்கள் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு இயங்குகின்றன என்பதை புரிந்துகொள்ளக்கூடிய சிறந்த அறிவைப் பெற்றிருக்க வேண்டியவர் இந்த டெக்னிக்கல் ரைட்டர். இவர் எப்போதுமே தொழில்நுட்பம் சார்ந்த சிந்தனையுடையவராய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அது தொடர்பாய் எழும் சிக்கல்களை எளிதில் புரிந்து தீர்க்க முடியும். மேலும் தொழில்நுட்பம் சாராத நபர்கள் புரிந்துகொள்ளும் வகையில், ஒரு தொழில்நுட்ப விஷயத்தை விளக்க முடியும். மேலும், இத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல ஆவணப்படுத்தும் திறனும் இருக்க வேண்டும்.
ரெக்கார்ட் மேனேஜர்
பதிவுகளை பராமரித்து, நிர்வகிப்பவர்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைத்து வகையான நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். இத்துறையில் சிறந்து விளங்குபவர்கள், பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். இத்தொழிலானது, வகைப்படுத்தல், சேமித்தல், பாதுகாத்தல், அழித்தல் மற்றும் ஆவணக்காப்பக பாதுகாப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
டேட்டாபேஸ் நிர்வாகி
இந்த வகை நிபுணர்கள், தகவல்களை சேகரித்தல் மற்றும் நிர்வகித்தலுக்காக டேட்டாபேஸ் பிரிவில் பணியாற்றுகிறார்கள். டேட்டாபேஸ் மேலாண்மை அமைப்புகளை ஏற்படுத்துவது மற்றும் அவற்றை சிறப்பாக இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவையே இத்துறை நிபுணர்களது பிரதானப் பணிகள்.
ஐ.டி. ப்ராஜெக்ட் மேனேஜர்
பெரிய திட்டங்களுக்கான வளங்களையும், மூலங்களையும் நிர்வகிப்பது இவரின் பணி. உதாரணமாக, பெரிய மென்பொருள் மேம்பாட்டுத் திட்டங்கள், நெட்வொர்க்கிங் திட்டங்கள், ஐ.டி. நிறுவுதல் மற்றும் மாற்றுதல் போன்றவை. மேலும், வணிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட்டு, அதிக பயன் விளைவுகளை பெறும் விஷயத்திலும் இவரது பங்கு உண்டு.
முதன்மை தகவல் அதிகாரி
ஒரு நிறுவனத்தின் ஐ.டி. துறைக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரே இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
மேலே சொல்லப்பட்டவைத் தவிர, ஐ.டி. துறையில் எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு இன்னும் பலவித பணி வாய்ப்புகள் உள்ளன. அவை,
சிஸ்டம் அனலிஸ்ட், இன்பர்மேஷன் சிஸ்டம் ஆடிட்டர், பி.சி.சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ், செட்யூலிங் அன்ட் கன்ட்ரோல் பெர்சன், சீனியர் ப்ராஜெக்ட் லீடர், டெக்னிக்கல் அனலிஸ்ட், டெலிகம்யூனிகேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட், சிஸ்டம் கன்சல்டன்ட், டேட்டா டிக்ஷனரி ஸ்பெஷலிஸ்ட், டேட்டாபேஸ் அனலிஸ்ட், என்ட்-யூசர் கம்ப்யூட்டர் மேனேஜர், ப்ரோகிராமர், ரெக்கார்ட்ஸ் மேனேஜர், செக்யூரிட்டி ஆபிசர், சர்விஸ் சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ், சாப்ட்வேர் குவாலிட்டி எவாலுவேட்டர், ட்ரெய்னிங் அன்ட் ஸ்டேன்டர்ட்ஸ் மேனேஜர், பிசினஸ் அப்ளிகேஷன்ஸ் கன்சல்டன்ட், கம்ப்யூட்டர் சர்விஸ் பெர்சன், நெட்வொர்க் இன்ஜினியர், நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர், டாகுமென்டேஷன் ஸ்பெஷலிஸ்ட், எக்யுப்மென்ட் மேனுபேக்சரர் ரெப்ரசன்டேடிவ், ப்ரோகிராம் லைப்ரரியன், ஹார்டுவேர் சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ், ஆபிஸ் ஆட்டோமேஷன் ஸ்பெஷலிஸ்ட், சாப்ட்வேர் சேல்ஸ் ரெப்ரசன்டேடிவ், டெக்னிக்கல் ரைட்டர் மற்றும் யூசர் இன்டர்பேஸ் ஸ்பெஷலிஸ்ட்.
மேற்கத்திய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியானது, ஐ.டி. தொழிலை இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு கொண்டு வருகிறது. எனவே இத்துறையில் நாளுக்கு நாள் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதன்மூலம் எப்போதுமே இத்துறையில் ஆள் பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கிறது. இத்துறையில் சிக்கல் தீர்ப்பதற்கான சிறந்த அறிவைக் கொண்ட நிபுணர்களுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. அனைத்து தொழில்களுமே கணினி மயமாகி வருவதால், இத்துறை படித்த மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
