UPDATED : ஆக 08, 2011 12:00 AM
ADDED : ஆக 08, 2011 01:26 PM
அதீத திறமை பெற்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களது திறமையை வெளிக்கொணரும் வகையில் உதவிகளை செய்ய 1963ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த திட்டம்.
இத்தேர்வின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்கலாம். அறிவியல், சமூக அறிவியல், பொறியியல், மருத்துவம், மேலாண்மை மற்றும் சட்டம் போன்ற பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் அறிவு சார் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இத்தேர்வு அமையும்.
இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவர்களது கல்விக்காக மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவி, அறிவியல் வணிகம் போன்ற பாடப்பிரிவுகளில் பிஎச்.டி. பயிலும் வரையும், தொழிற்கல்வியாக இருப்பின் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் வரையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வில் பங்கேற்கும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. இத்தேர்வை நடத்துகிறது.
அறிவியல், சமூக அறிவியல், கணிதப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. ஒன்று மாநில அளவில் நடத்தப்படும் தேர்வு. மாநில அளவில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் தேர்வில் பங்கற்கலாம்.
2011-12ம் கல்வியாண்டில் 8ம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வின் மூலம் 1000 மாணவர்கள் நிதியுதவி பெற தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ரூ.500 மாதந்தோறும் நிதியுதவியாக வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.ncert.nic.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் கையெழுத்து நிச்சயம் இடம்பெற வேண்டும். விண்ணப்பங்களை அரசு தேர்வுத் துறை இயக்ககத்திற்கே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் விண்ணப்ப தேதிகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
முதல்நிலை மாநிலத் தேர்வு நவம்பர் மாதம் 20ம் தேதியும், இரண்டாம் நிலை தேசியத் தேர்வு 2012ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதியும் நடைபெற உள்ளது.
வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்கள், நேரடியாக தேசிய அளவிலான இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப முறைகளையும், மேலும் விவரங்களையும் அறிந்து கொள்ள www.ncert.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.
