UPDATED : ஆக 17, 2011 12:00 AM
ADDED : ஆக 17, 2011 01:13 PM
இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கை இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர் அரசு பிடிஎஸ் மருத்துவக் கல்லூரியில் நேற்று சேர்ந்தனர். சேர்க்கை பெற்று ஆனால் கல்லூரிக்கு வந்து சேராமல் 10 மாணவர்கள் தவிர்த்துவிட்டனர். இதனால் பிடிஎஸ் படிப்பில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அரசு பிடிஎஸ் படிப்பில் சேர காத்திருப்போர் பட்டியலில் 202 மாணவர்கள் உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்று அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவ, மாணவியர், ஆகஸ்ட் 16ம் தேதியன்று அந்தந்த கல்லூரிகளில் போய் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெற்றிருந்த 85 மாணவர்களில் 75 பேர் முதலாமாண்டு படிப்பில் ரூ.10,290 செலுத்தி சேர்ந்தனர். இதில் ஏற்பட்டுள்ள 10 காலியிடங்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு அட்டவணை விரைவில் வெளிவரும். இவ்விடங்கள், செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ள மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும். காத்திருப்போர் பட்டியலில் உள்ள 202 பேரில் வகுப்புவாரியாக கட்-ஆப் பிரிக்கப்பட்டு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற பெரும்பாலான மாணவர்கள் நேற்று சேர்ந்துவிட்டனர். சேராமல் தவிர்த்ததால் ஏற்பட்ட காலியிடங்கள் குறித்த விவரம் விரையில் தெரியவரும். இவ்விடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்.
