UPDATED : ஆக 19, 2011 12:00 AM
ADDED : ஆக 19, 2011 10:48 AM
தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழுவின், புதிய தலைவராக ஓய்வு பெற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி சிங்காரவேலு, சமீபத்தில் பொறுப்பேற்றார். நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட, அதிக கட்டணம் வசூலித்தாக, 445 பள்ளிகள் மீது, பெற்றோர், தற்போதைய தலைவர் சிங்காரவேலுவிடன் புகார் மனு அனுப்பியுள்ளனர்.
நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் எவ்வளவு என்ற விவரங்களை குறிப்பிட்டு, விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, புகாரின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, முழுமையான விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, குழு தலைவர் சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.
முதன்மைக் கல்வி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று, புகார் குறித்து இருதரப்பையும் விசாரித்து, குழு தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பர். அறிக்கையின் அடிப்படையில், பள்ளி நிர்வாகிகள், புகார் அளித்த பெற்றோரையும் நேரில், விசாரணை நடத்தப்படும் என்றும், பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தது நிரூபணம் ஆனால், பள்ளிகள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, அபராதமோ அல்லது சிறைத்தண்டனையோ வழங்கப்படும் என, குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது,"புகார் மனுக்கள் மீதான விசாரணை மற்றும் தீர்ப்பு ஆகிய அனைத்து பணிகளும், மிக விரைவுபடுத்தி, ஒரு மாதத்திற்குள் எடுக்கப்படும். மாணவர், பெற்றோர் பாதிக்காமல் இருக்க, குழு உரிய நடவடிக்கையை கண்டிப்பாக எடுக்கும்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜனிடம் கேட்டபோது, "அதிக கட்டணம் வசூலித்ததாக இயக்குனரகத்திற்கு, 50 புகார்கள் வந்தன. இவற்றை குழு தலைவரின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். மாநிலம் முழுவதும் இருந்து, அதிக கட்டணம் குறித்த புகார்களை பெற்றோர், நேரடியாக குழு தலைவருக்கு அனுப்பி வருகின்றனர்" என்றார்.
