தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டெக்ஸ்டைல் துறை பணிவாய்ப்புகள் - படிப்புகள்

டெக்ஸ்டைல் துறை பணிவாய்ப்புகள் - படிப்புகள்

டெக்ஸ்டைல் துறை பணிவாய்ப்புகள் - படிப்புகள்


UPDATED : ஆக 24, 2011 12:00 AM

ADDED : ஆக 24, 2011 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2011 12:00 AM ADDED : ஆக 24, 2011 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கும் இத்துறைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

டெக்ஸ்டைல் சொர்க்கம்

பட்டு, கம்பளி, சணல், பருத்தி, நார்த்துணி ஆகிய 5 வகை நூலிழைகளின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. பட்டில் மட்டுமே, மல்பெரி, டசார், எர்ரி மற்றும் முகா உள்ளிட்ட 6 வகை பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நெசவு, சாயமிடுதல், பிரிண்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் போன்ற வீட்டுத் தொழில்கள், பண்படாத நூலிழைகளை முடிவுப் பொருட்களாக மாற்றுகின்றன. இத்தகைய பலவகை தயாரிப்புகளின் மூலம் டெக்ஸ்டைல் துறை கலைநயம் பொருந்தியதாக திகழ்கிறது.

உண்மையான டெக்ஸ்டைல் மையங்கள்

கார்ப்பரேட் அலுவலகங்களும், டிசைனர் ஸ்டுடியோக்களும் பெரு நகரங்களில் இருந்தாலும், உண்மையான டெக்ஸ்டைல் நடவடிக்கைகள் என்பவை, கரூர், பானிபட், கண்ணூர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள், கைத்தறி மற்றும் கைவினை மையங்களில்தான் நடக்கின்றன.

இத்துறையின் தொழில் வாய்ப்புகள்

டெக்ஸ்டைல் வடிவமைப்பு பாடத்திட்டமானது, தொழில்நுட்ப மற்றும் படைப்பாக்க அம்சங்களில் உங்களுக்கு பயிற்சியளிக்கிறது. பெயர்பெற்ற கல்வி நிறுவனங்களில் டெக்ஸ்டைல் வடிவமைப்பு பாடத்தை முடித்தவர்கள் ஆரம்பநிலையில் ரூ.20,000 ஆயிரம் முதல் ரூ.30,000 வரை பெறுகிறார்கள். இத்துறையில், பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு, ஏற்றுமதி நிறுவனத்தில் பணியில் சேர்பவர், ஆரம்பத்தில் ரூ.8000 வரை பெறுவார்.

1980களிலிருந்து, டெக்ஸ்டைல் துறையானது, பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. வடிவமைப்புத் துறையில் பல தொழில்நுட்ப புரட்சிகள் ஏற்பட்டுள்ளன. இன்றைய நிலையில், வடிவமைப்பாளர்கள்(டிசைனர்கள்), TexCad மற்றும் Textronic போன்ற கணினி மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.

முழுநேரப் பணி

இன்றைய நிலையில், டெக்ஸ்டைல் டிசைன் பட்டதாரிகள், ஏற்றுமதி மற்றும் வாங்குதல் மையங்கள், டெக்ஸ்டைல் மில்கள், கைத்தறி கூட்டுறவு ஆலைகள், டிசைன் ஸ்டுடியோக்கள் மற்றும் வாங்குதல் ஏஜென்சிகள் ஆகியவற்றில் முழுநேரப் பணியில் ஈடுபடலாம். பல ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களிடம் பணியாற்றும் டிசைனர்களுக்கு, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் டிசைன் தொடர்பான கண்காட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பினை அளிக்கின்றன. மேலும், மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.

சுயதொழில் வாய்ப்புகள்

ஒரு டெக்ஸ்டைல் டிசைனர் என்பவர் தொழில் முனைபவராகவும் இருக்கலாம். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பல திட்டங்கள்(Project) இவர்களுக்கு கிடைக்கும். ஒரு தொழில் முனைபவர், வடிவமைப்பில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், மார்க்கெடிங் மற்றும் மேலாண்மைத் துறையிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.

கைவினைஞர்களுடன் இணக்கம்

கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுவது, டெக்ஸ்டைல் டிசைனருக்கு முக்கியமானப் பணியாகும். ஆனால் பல டிசைனர்களுக்கு, கைவினைஞர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. சந்தையில், சவால்களை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இல்லையெனில், உங்களின் தொழிலில் வெற்றியடைய முடியாது.

வகுப்பறை

பள்ளிப்படிப்பை முடித்தப்பிறகு, 4 வருட இளநிலைப் படிப்பாக டெக்ஸ்டைல் டிசைனிங் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கையானது, பிராக்டிகல் ஸ்டுடியோ டெஸ்ட் மூலமாகவும், உங்களின் திறனையும், ஆர்வத்தையும் அளவிடும் நேர்முகத் தேர்வின் மூலமும் நடைபெறுகிறது. மேலும், நூலிழைகள், கைவினை தொடர்பாக உங்களின் மாதிரிப் படைப்புகளும் முக்கியம். மேலும் உங்களின் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் விதமான வரைபடங்கள் மற்றும் ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.

இப்படிப்பின் முதல் வருடத்தில், பவுண்டேஷன்(Foundation) படிப்புகள் நடத்தப்படும். இப்படிப்பின் பாடத்திட்டமானது, நெய்தல், பிரிண்டிங், சாயமிடல் மற்றும் நூலிழை கட்டமைப்பு உள்ளிட்ட, டெக்ஸ்டைல் துறையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாய் உள்ளது. இதைத்தவிர, இப்படிப்பில் மாணவர் பரிமாற்ற நடைமுறையும் உண்டு.

முதுநிலைப் படிப்பு

டெக்ஸ்டைல் துறையில் அதிகளவு ஆர்வமுடையவர்கள், இத்துறையில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளலாம். வடிவமைப்பிற்கான தேசிய கல்வி நிறுவனம்(National Institute of Design), முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதற்கான முக்கியமான ஒன்றாகும். இதில் சேர்வதற்கென்று சில தகுதி வரையறைகள் உள்ளன. அதை அறிந்துகொள்ள NID-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பொறியியல் படித்தவர்களும் இந்த முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இதைத்தவிர, வேறு ஏதேனும் துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்று, இதுதொடர்பான துறையில் ஓராண்டு அனுபவம் உள்ளவர்களும் இப்படிப்பை மேற்கொள்ள விரும்புகிறார்கள்.

படிப்பின் வகையும், வேலை வாய்ப்பும்

ஒருவர், டெக்ஸ்டைல் டிசைன் சிறப்பம்சம் கொண்ட(தொழில்நுட்ப திறனில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய) கவின்கலைத் துறையில் இளநிலைப் பட்டம் மேற்கொள்ளலாம். ஆனால் இத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடங்கள் குறைவாகவே உள்ளன. அதேசமயம், டெக்ஸ்டைல் அம்சங்களைக் கொண்டுள்ள ஹோம் சயின்ஸ் பாடத்தில் இளநிலைப் படிப்பையும் மேற்கொள்ளலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக, இந்தப் படிப்பில் பெண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பாலிடெக்னிக்குகள் மற்றும் கிராப்ட்(Craft - கைவினை) கல்வி நிறுவனங்கள் இதுதொடர்பான படிப்புகளை வழங்குகின்றன. பல டெக்ஸ்டைல் டிசைனர்கள் மற்றும் சிறிய ஸ்டுடியோக்கள் இதுபோன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து மாணவர்களை எடுத்துக் கொள்கின்றன. ப்ராஜெக்ட் அடிப்படையிலோ அல்லது முழுநேரப் பணியாளர்களாகவோ, உதவியாளர்கள் என்ற நிலையில் இம்மாணவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். நீங்கள் இத்துறையில் எத்தகைய கல்வியைக் கற்றாலும், இதன்மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம், படைப்புத்திறன் மற்றும் கடின உழைப்பு போன்றவையே உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us