வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் பணி அமர்வு மையமாகவும் செயல்படும்
வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் பணி அமர்வு மையமாகவும் செயல்படும்
UPDATED : ஆக 30, 2011 12:00 AM
ADDED : ஆக 30, 2011 10:51 AM
தமிழகம் முழுவதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் பணியமர்வு மையமாகவும் இனி செயல்படும் என்று தூத்துக்குடியில் நடந்த வேலைவாய்ப்புத்துறை அரசு விழாவில் அமைச்சர் செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான தனியார் துறையில் பணி அமர்த்தும் உதவித் திட்ட துவக்க விழா நேற்று வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது.
தனியார் துறையில் பணியமர்த்தும் உதவி திட்டத்தினை துவக்கி வைத்து தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசியதாவது; வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாநிலம் முழுவதும் 68 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். படித்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் தனியார் துறையில் வேலைக்கு ஆட்கள் இல்லை. ஒரு விசித்திரமான முரண்பாடு உள்ளது.
இதற்கு காரணம் படித்தவர்கள் இருக்கிறார்கள்
. ஆனால் அவர்களிடம் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி எதுவும் இல்லை. இதனால் தான் முதல்வர் ஜெ.,தமிழகத்தில் உள்ள ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் அரசு அலுவலர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் வகையில் வேலை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். மாநிலத்தில் முதல் முதலாக தூத்துக்குடியில் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இதில் பயன் பெற வேண்டும்
. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தனியார் பணியமர்வு மையமாகவும் இனி செயல்படும். 32 மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இந்த மையம் செயல்படும். மாநில அளவில் சென்னையில் இதற்கான கண்காணிப்பு மையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.