UPDATED : ஆக 31, 2011 12:00 AM
ADDED : ஆக 31, 2011 10:49 AM
மாணவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவர் என எஸ்.பி., தெரிவித்தார்.
ராக்கிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஊட்டி அரசு கலை கல்லூரியில் நடந்தது. கூட்டத்துக்கு எஸ்.பி., நிஜாமுதீன் தலைமை வகித்து பேசியதாவது;சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களுடன் தோழமையுடன் பழக வேண்டும். ராக்கிங் கொடுமை கல்லூரிகளில் அதிகரித்ததால்,ராக்கிங் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ராக்கிங் செய்து மாணவர் பிடிப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் ராக்கிங் வெகுவாக குறைந்துள்ளது. மாயார் கிராமத்தில் இருளர் இனத்தை சேர்ந்த மாணவர் மணிகண்டன் சிறப்பாக படித்து தேர்ச்சி பெற்று சேலம் அன்னபூர்ணா கல்லூரியில் மருத்துவ இடம் பெற்றுள்ளார். மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் லட்சியத்தை தீர்மானித்து அதை அடைய பாடுபட வேண்டும்.
கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும். ஆனால் அது மற்றவர்களின் சுதந்திரத்தை பாதிக்க கூடாது. மாணவர்கள் என்றாலும் தவறு செய்தால் தண்டனை உறுதி. கல்லூரியில் ராக்கிங் குறித்து புகார் செய்ய புகார் பெட்டி வைக்கப்படும். இதில் மாணவர்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு எஸ்.பி., நிஜாமுதீன் பேசினார்.
