UPDATED : செப் 03, 2011 12:00 AM
ADDED : செப் 03, 2011 12:22 PM
லட்சியம், தன்னம்பிக்கை உள்ள மாணவர்களுக்கு நூல்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் மதுரையில் 6வது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது. புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆட்சியர் பேசியதாவது, தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளது. அதை அகற்றும் விதமாக புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். லட்சியம், தன்னம்பிக்கை உள்ள மாணவர்களுக்கு நூல்களைக் கொண்டு செல்ல வேண்டும். இன்னும் கூடுதலான சலுகைகளை அறிவித்து கிராமப்புற மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்கள் கிடைக்க பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் முன் வர வேண்டும். வாழ்க்கையில் மிக நுட்பமான விஷயங்களைப் புத்தகங்கள்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களில்தான் மனிதர்களை உருவாக்கும் நூல்கள் கிடைக்கின்றன. புத்தகத் திருவிழாக்கள் மூலம் அந்தப் புரட்சி துவங்கிவிட்டது என்றார்.
