முதுநிலை சித்த மருத்துவக் படிப்பு இடங்களுக்கு அனுமதி மறுப்பு
முதுநிலை சித்த மருத்துவக் படிப்பு இடங்களுக்கு அனுமதி மறுப்பு
UPDATED : செப் 05, 2011 12:00 AM
ADDED : செப் 05, 2011 12:04 PM
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மிகப் பழமையான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 140 முதுநிலை சித்த மருத்துவ படிப்பு இடங்களில் இந்த கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேப்போல, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தசிய சித்த மருத்துவ நிறுவனத்திலும், பாளையங்கோட்டையைப் போன்று ஆறு முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 இடங்கள் வீதம் மொத்தம் 48 இடங்கள் இருந்தன. ஆனால், இந்த முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையையும் 48ல் இருந்து 25 ஆக இந்திய மருத்துவக் கவுன்சில் குறைத்துள்ளது. மேலும், இதுவரை இருந்த 6 முதுநிலைப் படிப்புகளில் 4 முதுநிலை படிப்புகளில் மட்டுமே மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது. முதுநிலை சித்த மருத்துவப் பிரிவான குழந்தை மருத்துவம் (எம்.டி. குழந்தை மருத்துவம்), முதுநிலை நோய் நாடல் மருத்துவம் (எம்.டி. நோய் நாடல்) படிப்பு என தலா 8 இடங்களிலும் மாணவர்களை சேர்க்கக் கூடாது என மத்திய சித்த மருத்துவக் கவுன்சில் கூறியுள்ளது. எம்.டி. பொது மருத்துவப் படிப்பு இடங்கள் 8ல் இருந்து 6 ஆகவும், எம்.டி. குண பாடம் படிப்பில் 8 லிருந்து 5 ஆகவும், எம்.டி. சிறப்பு மருத்துவ படிப்பில் 8லிருந்து 7 அகவும், எம்.டி. நஞ்சு மருத்துவ படிப்பில் 8லிருந்து 7 ஆகவும் சேர்க்கை இடங்களை இந்திய மருத்துவ கவுன்சில் குறைத்துள்ளது. தேவையான பேராசிரியர் - விரிவுரையாளர் இல்லாமை, மருத்துவமனைகளில் போதிய இட வசதி இன்மை, ஆய்வுக்கூட வசதி இன்மையைக் காரணம் காட்டி முதுநிலை படிப்பு இடங்களுக்கான அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்துள்ளது. ஆனால், மற்ற தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் இல்லாத நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சித்த மருத்துவத்தில் இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
