UPDATED : செப் 10, 2011 12:00 AM
ADDED : செப் 10, 2011 11:43 AM
ஒரு மாணவர் என்ற முறையில் எப்படி பாதுகாப்பாக வெளிநாட்டு சூழலில் நடந்து கொள்ளவேண்டும் என்பதை ஒவ்வொரு மாணவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
சட்டத்திற்கு கீழ்படிதல்
ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து படிக்கச் செல்லும் மாணவர்கள், அந்நாட்டு சட்டதிட்டங்களை தெளிவாக அறிந்துகொள்வது முக்கியம். மாணவர் விசா நடைமுறையிலேயே, Australian Values Statement எனும் ஒரு கையெழுத்திட வேண்டிய ஆவணம் இணைக்கப்பட்டிருக்கும். ஆஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கு கீழ்படிவதற்கான அறிவுறுத்தல் அதில் இருக்கும். படிக்கும் காலத்தில் சட்டத்தை மீறுவதானது, அபராதம், விசா ரத்து மற்றும் திருப்பி அனுப்புதல் போன்ற பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும். மேலும், சிறை தண்டனையும் உண்டு. ஆஸ்திரேலிய சட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள www.nla.gov.au/oz/law.html என்ற இணையதளம் செல்லவும்.
சுய பாதுகாப்பு
குறைந்தளவு குற்றப் பதிவுகளைக் கொண்ட பாதுகாப்பான இடம் ஆஸ்திரேலியா என்று கூறப்பட்டாலும், எங்குமே எச்சரிக்கையாக இருப்பது, எப்போதுமே நல்லதுதானே. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பொதுப்போக்குவரத்து எப்போதுமே பாதுகாப்பானது. பொது இடங்களும் பாதுகாப்பானவை. இரவில் எங்காவது சென்றால், முடிந்தளவு நண்பர்களுடன் செல்வது நல்லது. உங்களின் உடமைகளை உங்களுக்கு அருகிலேயே வைத்திருப்பதும் நல்லது. மக்கள் அதிகம் உள்ள இடத்திற்கும், ஆளரவமற்ற இடத்திற்கு நிறைய வித்தியாசம் உண்டு. உங்களின் சுற்றுப்புறம் பற்றிய விழிப்புணர்வு எப்போதுமே உங்களுக்கு இருக்க வேண்டும். சிக்கலான நேரங்களில் பேருந்தில் பயணம் செய்கையில், ஓட்டுநருக்கு அருகில் அமர்வது நல்லது.
யாராவது உங்களுக்கு தொந்தரவு கொடுத்து, உங்களைப் பின்தொடர்ந்து வந்தால், உடனே, அவசர உதவிக்கான அழைப்பை உபயோகிக்கவும். அதுவே, பேருந்தாக இருந்தால், ஓட்டுநரிடம் தெரிவிக்கவும். ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்கவும். இரவு நேரங்களில் தேவையின்றி சுற்றித் திரியக்கூடாது. இரவு நேரத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த நினைத்தால், அவற்றின் கால அட்டவணைப் பற்றி தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், டாக்ஸி பிடித்து உங்களின் இடம் போய்ச் சேர்வது சிறந்தது.
ஆஸ்திரேலியாவில் அவசர உதவி அழைப்புக்கான எண் 000. அனைத்துவித போன்களிலிருந்தும் இந்த எண்ணுக்கு இலவச அழைப்பை மேற்கொள்ளலாம். இந்த 000 என்ற அவசர எண்ணை மொபைல் போன் மூலமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சம்பந்தப்பட்ட வழங்குநர்களிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளவும்.
உயிருக்கு ஆபத்தான சூழலில் நீங்கள் சிக்கியிருக்கும்போது, காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றின் உதவியை நாட 000 என்ற எண்ணைப் பயன்படுத்தலாம். அதேசமயத்தில், சாதாரண விஷயங்களுக்கு இந்த எண்ணைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உங்களால் 000 என்ற எண்ணில் தொடர்வுகொண்டு தெளிவான ஆங்கிலத்தில் பேச இயலவில்லை என்றாலும், உங்களின் தேவை என்ன என்று கூறினால், உங்களின் மொழி தெரிவிக்கப்பட்டு, மொழிபெயர்ப்பு வசதியுடன் இணைக்கப்படுவீர்கள். எனவே கவலை வேண்டாம். உங்களுக்கான உதவி வந்து சேரும்வரை, பதட்டமின்றி அமைதியாக இருக்கவும். அந்த இடைபட்ட நேரத்தில் ஏடாகூடமாக எதையும் செய்து உங்களுக்கும், மற்றவர்களுக்கும் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்திவிடக் கூடாது.
