UPDATED : செப் 14, 2011 12:00 AM
ADDED : செப் 14, 2011 10:38 AM
சென்னை:வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரக்கோரி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில், 30 ஆயிரத்து, 832 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை, 7,682 பேருக்கு இந்நிறுவனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.தமிழகத்திலிருந்து, வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்புவோர், போலி முகவர்களிடம் சிக்கி, ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தர்ப்பத்தை அதிகரித்து தரும் வகையிலும், தமிழக அரசு, 1978ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை துவக்கியது. கடந்த ஜூலை மாதம் வரை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு கோரி, 30 ஆயிரத்து, 832 பேர் பதிவு செய்துள்ளனர். சென்னை வந்து பதிவு செய்வதில் ஏற்படும் பணம் மற்றும் கால விரையத்தை நீக்கும் வகையில், கடந்த ஆண்டில், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகாமை இந்நிறுவனம் நடத்தியது. கடந்த ஆண்டில் மட்டும் 5,818 பேரும், நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரை, 616 பேரும் பதிவு செய்துள்ளனர். இதுவரை, 7,682 பேருக்கு பல்வேறு நாடுகளில், இந்நிறுவனம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 328 பேர் வேலைவாய்ப்புப் பெற்றனர். இந்த விவரங்கள் தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
