வணிகப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சரிந்தது: ஆய்வு
வணிகப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சரிந்தது: ஆய்வு
UPDATED : செப் 16, 2011 12:00 AM
ADDED : செப் 16, 2011 02:17 PM
கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிஷன் கவுன்சில்(GMAC) மேற்கொண்ட ஆய்வில், பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருக்கையில், வணிகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதாகவும், இறங்கு முகத்தில் இருக்கையில், வணிகப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆசிய-பசிபிக் நாடுகளில் இந்த நிலை அதிகமிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் படிக்கும் முழுநேர எம்.பி.ஏ. படிப்புகளுக்கு மட்டுமின்றி, ஒரு வருட எம்.பி.ஏ. படிப்பிற்கான சேர்க்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்துறை நிபுணர்கள் கூறுவதாவது, &'பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருந்து அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்போது, அதை விட்டுவிட்டு யாரும் படிப்பதற்கு செல்ல விரும்புவதில்லை. ஏனெனில் படிப்பு முடிந்து வரும்போது, மீண்டும் அதேபோன்ற பொருத்தமானப் பணி கிடைக்குமா? என்பதற்கு உத்தரவாதமில்லை. மேலும், எம்.பி.ஏ. படிப்பு என்பது, இளநிலைப் படிப்பை முடித்தவுடனேயே மேற்கொள்ள வேண்டிய படிப்பாக இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் அந்தப் படிப்பை மேற்கொள்ளலாம் என்பதால், வேலைக்கே முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வேலை வாய்ப்புகள் சுருங்கும்போது, அந்த நேரத்தில் படிக்கலாம் என்றும் பலர் முடிவெடுக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் பொருளாதார சரிவு உலகெங்கும் ஏற்பட்டபோது, வணிகப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் அதிகரித்தன என்பதே இதற்கு உதாரணம்.
மேலும், முழுநேர எம்.பி.ஏ. படிப்புதான் என்றில்லாமல், பொதுமக்கள் தொடர்பு மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் போன்ற படிப்புகளிலும் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது&' என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற வெளிநாட்டு வணிகப் பள்ளிகளுக்கு, வரும் வெளிநாட்டு விண்ணப்பங்களில், இந்தியாவிலிருந்து வருவதுதான் அதிகம். ஆனால், தற்போது பொருளாதார ஏறுமுகத்தின் காரணமாக, அந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், பகுதிநேர வணிகப் படிப்புகள், கடந்த வருடத்திற்கு சமமான அல்லது அதைவிட அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், உலகப் பொருளாதாரம் ஏறுமுகத்தில் இருப்பதாலும், வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
