UPDATED : செப் 17, 2011 12:00 AM
ADDED : செப் 17, 2011 12:10 PM
கடினம் என நினைக்கும் காரியத்திலிருந்து ஒதுங்கி விடுவது ஒருவகை. எதையும் ஒரு கை பார்த்து, சாதித்து விடுவது என்பது மற்றொரு வகை. இரண்டாம் வகையை சேர்ந்தவர் சந்தியா.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த பேராசிரியர் சுந்தரராஜன் மகள் சந்தியா. பத்மா சேஷாத்ரி பள்ளி சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 வில் 476 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பெற்றார். எல்லோரும் கடினம் என நினைக்கும் பட்டய கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்&'சி.ஏ.,) ஆக வேண்டும் என்பது சந்தியாவின் லட்சியம்.
"பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்' (பி.டபிள்யூ.சி.,) நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆடிட்டரிடம் பயிற்சி பெற்றவாறு, சி.ஏ., முதற்கட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். இதை முதல் முயற்சியில் சாதித்தார்.
பின் இறுதித் தேர்வில் அகில இந்திய அளவில் நான்காம் இடம், தென்மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இக்னோ தொலைக் கல்வியில் பி.காம்.,முடித்துள்ளார். சந்தியா கூறியதாவது: எல்லோரும் பொறியாளராக வேண்டும் என விரும்புகின்றனர்.
சி.ஏ.,க்களின் தேவை அதிகம் உள்ளது; வேலை நிச்சயம். படித்துக்கொண்டே சம்பாதிக்கலாம். கிராமப்புற மாணவர்களும் சி.ஏ.,தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் நான்குமுறை எழுதி தேர்ச்சி பெறாவிடில், போதும் என ஒதுங்கிவிடுகின்றனர். கடின முயற்சி தேவை. தற்போது ஏ.சி.எஸ்.,படிக்கிறேன்.
அடுத்து சி.டபிள்யூ.ஏ.,படிக்க உள்ளேன் என்றார். மதுரை சேஷகோபாலனின் சிஷ்யர் ஸ்ரீரங்காச்சாரியிடம் 14 ஆண்டுகளாக கர்நாடக இசை பயின்று வருகிறார். மியூசிக் அகாடமி, நாரதகான சபாவில் பாடிவருகிறார். பல இசைப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின்போது மதுரை சின்மயா மிஷனில் பாடிவருகிறார். மதுரை காமராஜ் பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., பதிவாளராக இருந்த சந்தானகோபாலனின் பேத்தி என்பது கூடுதல் தகவல்.
