UPDATED : செப் 19, 2011 12:00 AM
ADDED : செப் 19, 2011 10:41 AM
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் சித்த-ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பி.எஸ்.எம்.எஸ். மற்றும் பி.ஏ.எம்.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.
அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி பெற தமிழக அரசின் சுகாதாரத் துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
தனியார் சித்த-ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் மொத்த இடங்களில் 65 விழுக்காட்டு இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்படும். ஆனால், தனியார் கல்லூரிகளிலும் பல இடங்கள் அனுமதி கிடைக்காததால், அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் கிடைக்காத நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை-யோகா மருத்துவப் படிப்புகளில் சேர 1,400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3வது வாரம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு செப்டம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கலந்தாய்வு நடத்த இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு திட்டமிட்டிருந்தது.
மத்திய இந்திய மருத்துவ முறை கவுன்சில் பல கல்லூரிகளில் மாணவ சேர்க்கைக்கு அனுமதி தராததால், தரவரிசைப் பட்டியலை வெளியிடாமலும் கலந்தாய்வு தேதி குறித்துத் தகவல் வெளியிட முடியாமலும் தேர்வுக் குழுவினர் உள்ளனர்.
எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் மாணவ சேர்க்கை முடிந்து வகுப்புகள் துவங்கிவிட்டன. இந்த நிலையில், இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் துவங்காமல் இருப்பதால், அதில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தற்போதுள்ள இடங்களில் மாணவர்களை முதல் கட்ட கலந்தாய்வு நடத்தி உடனடியாக சேர்க்கையை முடித்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை தீவிரமாக முயற்சி செய்து, அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி பெற்றதும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலமாக அவ்விடங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய முறை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க அக்டோபர் 31ம் தேதிதான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
