தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டில் பொறியியல் கல்வி

வெளிநாட்டில் பொறியியல் கல்வி

வெளிநாட்டில் பொறியியல் கல்வி


UPDATED : அக் 01, 2011 12:00 AM

ADDED : அக் 03, 2011 08:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 01, 2011 12:00 AM ADDED : அக் 03, 2011 08:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுவாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகள், குறிப்பிட்ட துறையில் ஏற்பட்டிருக்கும் புதிய கண்டுபிடிப்புகளை கல்வியில் அறிமுகப்படுத்துவதுடன், விரிவான ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகின்றன. சமீபகாலமாக, ஆசிய நாடுகளான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளும், அனுபவரீதியிலான கல்வி, சர்வதேச அணுகுமுறை மற்றும் சிறப்பான வேலை வாய்ப்புகள் போன்றவற்றால், பொறியியல் படிப்புகளுக்கு இந்த நாடுகளும் பெயர்பெற்று விளங்குகின்றன. சர்வதேச கல்வியின் முக்கியத்துவத்தை, உலகளாவிய நிறுவனங்கள் அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் விரும்பிய பொறியியல் கல்லூரிகள் கிடைக்காத காரணத்தாலும், வெளிநாட்டுப் பல்கலைகளில் படிக்க பலர் விரும்புகின்றனர்.

கணக்கிலடங்காத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற பல நாடுகளில் எங்கே செல்வது என்ற குழப்பம் ஏற்படும். பல சர்வதேச கல்வி நிறுவனங்கள், கல்வி தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்புகளையும் வைத்துள்ளன. நீண்டகால திட்டங்கள், வேலைவாய்ப்புகள், கற்பித்தல் மொழிகள், அணுகல் வசதிகள், செலவினங்கள் போன்ற பல விஷயங்களை கவனத்தில் கொண்டே ஒரு மாணவர், வெளிநாட்டுக் கல்வித் தொடர்பான முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

சேர்க்கை நடைமுறைகள்

ஒவ்வொரு வெளிநாட்டுப் பல்கலையும், தனக்கென தனித்தனி சேர்க்கை விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், சில விதிமுறைகள் அனைத்திற்கும் பொதுவானவையாக உள்ளன. அந்தப் பொதுவான அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,

* இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு, நீங்கள் எந்த நாட்டு பல்கலைக்கு விண்ணப்பம் செய்கிறீர்களோ, அந்நாட்டில் அங்கீகரிக்கத்தக்க பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுவாக, CBSE, IB போன்ற நிலையிலான பள்ளி படிப்புகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. உங்களின் பள்ளிப் படிப்பு ஆவணங்களைப் பொறுத்தவரை, மதிப்பெண்களுடன், இதர திறன் சான்றுகளும் இருந்தால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும்.

* அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும்போது ஆங்கிலத்திறமை என்பது மிகவும் முக்கியம். எனவே, TOEFL மற்றும் IELTS போன்ற தேர்வுகளை எழுதி, தேவையான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

* பொறியியல் படிக்க வேண்டுமெனில், பள்ளிப் படிப்பில் கணிதம் இருக்க வேண்டியது கட்டாயம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சில பல்கலைக்கழகங்கள் இந்த கணிதத்துடன், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களும் கட்டாயம் என்கின்றன. இந்தியாவில் வணிகப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் இளநிலை கணினி அறிவியல் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

* பெரும்பாலான வெளிநாட்டுப் பல்கலைகள், SAT1 மற்றும் SAT2 தேர்வில் மாணவர்கள் தேறியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. குறிப்பாக அமெரிக்க கல்வி நிறுவனங்கள் இத்தகைய தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை ஒரு பொதுத் தகுதியாகவேப் பார்க்கின்றன.

* எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகமும், மாணவரின் மதிப்பெண் பட்டியலோடு, அவரின் தனித்திறன் சான்றிதழ்களையும்(Certificate of extra curricular activities) முக்கியமாகக் கருதுகின்றன. எனவே, வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு காணும் மாணவர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

* சில நாடுகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேர, குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேர்க்கைக்கு தயாராதல்

நீங்கள், இளநிலைப் பொறியியல் படிப்பை ஏதேனும் ஒரு வெளிநாட்டுப் பல்கலையில் மேற்கொள்ள விரும்பினால், அதற்கான தேர்வுசெய்தல் செயல்பாட்டை பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கிவிட வேண்டும். 12ம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே நீங்கள் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். எனவே அந்த நிலையில் நீங்கள் 11ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அதிக முக்கியத்துவம் பெறும். எனவே, 11ம் வகுப்பு தேர்வை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதன் மதிப்பெண்கள்தான், இதுபோன்ற சூழல்களில் உங்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன.

ஒரு வெளிநாட்டு பல்கலையை தேர்வுசெய்யும் முன்பாக,

* உங்களின் எதிர்கால லட்சியத்திற்கும், பாடத்திட்டத்திற்கும் உள்ள தொடர்பு

* குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம்

* செலவினங்கள்

* படிப்பின் காலஅளவு

* படிப்பிற்கு பிறகான வேலை வாய்ப்புகள்

போன்ற அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில், ஆன்லைன் விண்ணப்ப முறைகள் பிரபலமாகிவிட்டதால், வெளிநாட்டு பல்கலைகளில் விண்ணப்பித்தல் எளிதான காரியமாக உள்ளது. ஏறக்குறைய அனைத்து பல்கலைகளுமே, விண்ணப்பதாரரின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்கள், ஆசிரியர்களிடமிருந்து பெற்ற பரிந்துரைக் கடிதங்கள், தனிப்பட்ட அறிக்கைகள் மற்றும் நிதிநிலை ஆதாரங்கள் போன்றவைகளையே எதிர்பார்க்கின்றன.

விண்ணப்பிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அலசி ஆராய்வது நல்லது.

தற்போது, சில பிரதான நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பற்றி அலசலாம்.

அமெரிக்கா

இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலையும், கல்லூரியும் தனித்தனியான சேர்க்கை நடைமுறைகளைக் கொண்டுள்ளன. ஒரு அமெரிக்க கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக, அதன் அங்கீகாரம் பற்றி ஆய்வு செய்தல் முக்கியம். அமெரிக்காவில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளை Accreditation board for engineering and technology(ABET) என்ற அமைப்பு மதிப்பீடு செய்து அங்கீகரிக்கிறது. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த அமைப்பானது படிப்பைத்தான் மதிப்பிடுகிறதே தவிர, கல்வி நிறுவனங்களையல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்திலேயே சில துறைகள் அங்கீகரிக்கப்பட்டும், சில அங்கீகாரம் பெறாமலும் இருக்கலாம்.

அமெரிக்க இளநிலை பொறியியல் படிப்புகள் பொதுவாக 4 வருட காலஅளவைக் கொண்டவை என்றாலும், சில கல்வி நிறுவனங்கள் 5 வருடங்கள் கொண்ட ஒருங்கிணைந்தப் படிப்புகளையும் வழங்குகின்றன. இளநிலைப் படிப்புகளின்போதே ஆராய்ச்சி வசதிகளும், பயிற்சிகளும் அதிகளவில் கிடைக்கின்றன. பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய வசதிகள் உள்ளன. முக்கியமான துறைகளைத் தேர்ந்தெடுக்க, SAT1 மற்றும் SAT2 தேர்வுகளின் மதிப்பெண்கள் முக்கியம். இளநிலைப் படிப்புகள், நீங்கள் எத்தனை வருடங்கள் படித்தீர்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல், தேவையான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்களா என்பதை வைத்தே நிறைவு பெறுகின்றன.

படிப்பிற்கான கட்டணங்கள் கல்லூரிக்கு கல்லூரி வேறுபடுகின்றன. சுமார் USD20,000 முதல் சுமார் USD45,000 வரை ஒரு வருடத்திற்கு செலவாகின்றன. கல்வி உதவித் தொகை திட்டங்களும் உள்ளன. உதவித்தொகைகளைப் பெறுவதற்கு குடும்பத்தின் பொருளாதார நிலைமையை விளக்கும் ஆதார சான்றுகளும் அவசியம். அதேசமயம், நிதி உதவியை கல்வி நிறுவனத்திலிருந்து கோருவதானது, உங்களின் சேர்க்கைப் பெறும் வாய்ப்பினை குறைக்கவும் செய்யலாம்.(ஏனெனில் இதில் சில சிக்கல்கள் உள்ளன).

இந்நாட்டில், பொறியியல் இளநிலை படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்தப்பிறகு, விருப்ப பயிற்சிகளைப் பெறும் வகையில், கூடுதலாக 29 மாதங்கள் வரை அமெரிக்காவில் தங்கியிருக்கலாம்.

ஆஸ்திரேலியா

கடந்த 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் படிப்பு இந்திய மாணவர்களைக் கவர்ந்து வருகிறது(இடையில் சில பிரச்சினைகள் இருந்தாலும்). சிறந்த ஆராய்ச்சி வசதிகள், இந்நாட்டின் படிப்புகளுக்கு கிடைக்கும் சர்வதேச அங்கீகாரம் போன்றவை மாணவர்களைக் கவரும் முக்கிய அம்சங்கள். ஆஸ்திரேலியக் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஆஸ்திரேலிய சீனியர் செகண்டரி கல்வி சான்றிதழ் அல்லது சர்வதேச தகுதியுடைய அதே நிலையிலான கல்வி சான்றிதழ் (உதாரணம் - இந்திய மேல்நிலைப் படிப்பின்(12ம் வகுப்பு) கல்விச் சான்றிதழ்) ஆகிய ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். பொதுவாக, மாணவர்கள் IELTS போன்ற தேர்வுகளை எழுதி தங்களின் ஆங்கில புலமையை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேசமயம் இதுபோன்ற ஆங்கிலமொழித் திறன் தேர்வை, விண்ணப்பம் செய்யும் நாளுக்கு 24 மாதங்களுக்கு முன்பாக எழுதியிருக்க வேண்டும். அதற்கும் முன்பாக எழுதியிருந்தால், அது கணக்கில் எடுக்கப்படாது.

இத்தேர்வின் மதிப்பெண்கள் பல ஆஸ்திரேலிய பல்கலைகளில் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பொறியியல் சேர விரும்பும் மாணவர்கள், தங்களது பள்ளிப் படிப்பின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளின் 4 வருடங்களும் கணிதப் பாடத்தைக் கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

இந்நாட்டு பொறியியல் படிப்பு 3 வருடங்களைக் கொண்டது. ஒரு வருடத்திற்கு A$9,000 முதல் A$14,000 வரை செலவாகிறது. இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் உண்டு. ஒரு வெளிநாட்டு மாணவர் என்ற முறையில் உங்களின் டியூஷன் கட்டணத்தை முன்னமேயே நீங்கள் செலுத்திவிட வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us