குரூப் 2 : இலவச பயிற்சி மையத்தில் படித்த 32 பேர் தேர்வு
குரூப் 2 : இலவச பயிற்சி மையத்தில் படித்த 32 பேர் தேர்வு
UPDATED : அக் 12, 2011 12:00 AM
ADDED : அக் 12, 2011 02:44 PM
விருதுநகர் : அரசு ஊழியர் சங்க இலவச பயிற்சி மையத்தில் படித்த 32 பேர், குரூப் 2 பணிக்கு தேர்வு பெற்றனர்.
விருதுநகர் அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், அரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, அரசு ஊழியர்களால் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
குரூப் 2 தேர்வுக்கு 425 பேர் பயிற்சி பெற்றதில், 62 பேர் எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டதில் 32 பேர் தேர்வு பெற்று, பணிக்கு செல்ல உள்ளனர். 4 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நேர்முகத்தேர்வு இல்லாத பணி நியமனங்களுக்கு இன்னும் முடிவுகள் வெளியாகவில்லை. அதிலும் தேர்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளது.
அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், "அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், இலவசமாக விடுமுறை தினங்களில் மட்டுமே பயிற்சி வழங்கப்படுகிறது. போட்டி தேர்வுகளுக்கு வினாக்கள் பாட வாரியாக வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
நேர்முகத்தேர்வுக்கு ஓய்வு அதிகாரிகளை வைத்து பயிற்சி வழங்கப்பட்டதால் அதிகம் பேர் பணிக்கு செல்ல உள்ளனர்" என்றார்.
