UPDATED : அக் 13, 2011 12:00 AM
ADDED : அக் 13, 2011 10:16 AM
இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், தினமலர் நாளிதழ் மற்றும் புதிய தலைமுறை அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, நேர்முகத் தேர்வு பயிற்சி முகாமுக்கு, ராஜாஜி பொதுநல மையம் ஏற்பாடு செய்திருந்தது.
கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச பயிற்சி முகாமை, துவக்கி வைத்து பேசிய ராஜாஜி பொதுநல மையத் தலைவர் நாராயணசாமி, "நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி என்றால், வேலை பெறுவதற்கான நேர்முகத் தேர்வுக்கு மட்டும் அல்லாமல், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும், நமது எண்ணத்தை, சிந்தனையை எப்படி சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற வகையில், எல்லோருக்கும் இப்பயிற்சி முகாம் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது குறித்து விளக்கிய மத்திய பணியாளர் தேர்வாணைய மண்டல இயக்குனர் பாக்யா தேவி, "ஒரு கேள்விக்கு பதில் தெரியாவிட்டால், தெரியாது என சொல்ல தைரியம் வேண்டும். தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டு, அபத்தமான பதிலை சொல்லக் கூடாது" என்றார். அவர் மேலும் கூறும்போது, "ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. ஏராளமான மத்திய அரசு பணிகள் உள்ளன. இத்தேர்வுகளை எளிதாக எதிர்கொண்டு சிறந்த பணிகளை பெறலாம். அதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இத்தேர்வுக்கு தயாராக, புத்தகங்கள் வாங்க இயலாதவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்" என்றார்.
வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திர பாபு, நேர்முகத் தேர்வின்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், எதை பேச வேண்டும், எதை பேசக் கூடாது என்பது குறித்து விளக்கினார்.
மத்திய கலால் மற்றும் சுங்க வரி கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியம் சென்ட்ரல் பாங்க் முன்னாள் துணை பொது மேலாளர் எஸ்.
கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள், நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான சூட்சமங்களை இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்து, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விவாதங்கள், கலந்துரையாடலுக்கு பின், மாதிரி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில்,
நேர்முகத் தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவு விழாவில், பேசிய, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, "உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்புகளை பெற, இதுபோன்ற பயிற்சி முகாம்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு வேலையை இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும். நேர்முகத்தேர்வை எதிர்கொள்ளும் இளைஞர்கள், துணிவோடு பிரச்னைகளை அணுகும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.