அறிவியல் பட்டதாரிகளுக்கு பொற்காலம் காத்திருக்கிறது
அறிவியல் பட்டதாரிகளுக்கு பொற்காலம் காத்திருக்கிறது
UPDATED : அக் 18, 2011 12:00 AM
ADDED : அக் 18, 2011 09:53 AM
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை பல்கலையின் நில அமைப்பியல் துறை சார்பில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஐந்து நாள் அறிவியல் பயிரலங்கம், சென்னை பல்கலை கிண்டி வளாகத்தில் நடந்தது.
இதில், சென்னை, அசோக்நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி, சூளைமேடு, சைதாப்பேட்டை உள்ளிட்ட, 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, 150 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களுக்கு, இந்தியாவில் தலைச்சிறந்த, 25 பேராசிரியர்கள், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் பயன்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர்.
இப்பயிலரங்கின் நிறைவு விழா, சென்னை பல்கலை கிண்டி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பேராசிரியர் பாண்டியன் பேசியதாவது: தமிழகத்தில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் புதிய பி.இ., பட்டதாரிகள் வெளி வருகின்றனர். இவர்களில் பலர், படிப்பிற்கான வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். தங்களின் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் விருப்பத்தின் பெயரில், அவர்கள் பி.இ., படித்தது கூட இந்நிலைக்கு காரணமாக இருக்கலாம். மாறாக, அறிவியல் பட்டப் படிப்புகள் குறித்த விழிப்புணர்வு, மாணவர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது.
அறிவியல் துறைகளில் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்டம் பெறுவோருக்கு உலகளவில் சிறந்த பொற்காலம் காத்திருக்கிறது. எனவே, தொழில்படிப்பில் சுயவிருப்பம் இல்லாத மாணவர்கள், கல்லூரி படிப்பிற்கு அறிவியல் பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்" இவ்வாறு பாண்டியன் பேசினார்.
