பெண் கல்விக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு தகவல்
பெண் கல்விக்கு ரூ.22 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு தகவல்
UPDATED : செப் 09, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநில பள்ளிசாரா கல்விக் கருவூலம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியன இணைந்து, உலக எழுத்தறிவு தினத்தை சென்னையில் செப்., 8ம் தேதி கொண்டாடின.
விழா சிறப்பு மலர், சுவரொட்டி மற்றும் நூல்களை வெளியிட்டு, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
தமிழகத்தில் 75 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆண்களில் 82 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் எழுத்தறிவு 18 சதவீதம் குறைவாக இருக்கிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களின் எழுத்தறிவு சதவீதம் உயர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெண் கல்வி முன்னேற்றத்திற்காக நடப்பாண்டில் 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் எழுத்தறிவு பெற்றவர்களாக விளங்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட்டு, துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்.
தேசிய எழுத்தறிவு சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் மட்டும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்து, எழுத்தறிவு பெறுவதில் அம்மாவட்டமும் முன்னேற்றத்தை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்கல்வி மையங்களை மாலை நேர வகுப்புகளாக மாற்ற வேண்டும் என இயக்குனர் கோரிக்கை வைத்துள்ளார். அது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
முன்னதாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் குற்றாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குனர் லட்சுமி வரவேற்றார்.
சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன், எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் வெங்கடேசன், பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.