இதழியல் துறையில் கவனம் செலுத்தும் யாழ் தமிழ் மாணவர்கள்
இதழியல் துறையில் கவனம் செலுத்தும் யாழ் தமிழ் மாணவர்கள்
UPDATED : அக் 23, 2011 12:00 AM
ADDED : அக் 23, 2011 05:41 PM
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய, இதழியல் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கும் விதமாக தமிழகம் அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஊடக நிறுவனங்களில் இதழியல் பாடம் தொடர்பான அனுபங்களைப் பெறும் விதத்தில் இந்த கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
மொத்தம் 29 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடந்த 17ம் தேதி தமிழகம் அழைத்து வரப்பட்டனர். சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இக்கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கருத்தரங்குகள்; கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியகள், மாணவர்களுடன் கலந்துரையாடுகின்றர்.
பாரம்பரிய சின்னங்கள் சார்ந்த அறிக்கை சமர்ப்பித்தல், குடிசைப் பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரித்தல் உள்ளிட்ட களப்பணிகளிலும் ஈடுபடுகின்றனர். கல்விச் சுற்றுலா குறித்து அம்மாணவர்களிடமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய இயக்குனர் தேவானந்திடம் பேசினோம். அதிலிருந்து...
* அங்கு ஊடகத்துறையில் எதிர்காலம் எப்படி?
யாழ்ப்பாணத்தில் ஐந்து லட்சம் மக்கள் உள்ளனர். உதயம், தினக்குரல், தினமுரசு, வலம்புரி போன்ற பிராந்திய பத்திரிகைகளும், வீரகேசரி, தினகரன் போன்ற தேசிய பத்திரிகைகளும் யாழ்ப்பாண மக்களுக்காகவே வெளிவருகின்றன. யாழ்ப்பாண தமிழ் மாணவர்கள் இதழியில் துறையில் இப்போதுதான் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றனர். ஏற்கனவே சொன்னது போல், பிராந்திய பத்திரிகைகளும், தேசிய பத்திரிகைகளிலும் எங்கள் மாணவர்கள் எழுதத் துவங்கி உள்ளனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆங்கில ஊடகங்கள் உள்ளூர் செய்திகளுக்காக எங்களைப் பயன்படுத்திக் கொள்வர். தற்போது இடைப்பள்ளி மாணவர்களுக்கு ஊடகவியல் பற்றிய அடிப்படை அறிவைப் புகுத்த கல்வித்துறை முன்வந்துள்ளது. இதனால், ஆசிரியராகவும் பணிபுரியலாம். ஆனால், இதழியல் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் போட்டியும் அதிகரித்து, படிக்கும் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கலாம்.
* யாழ்த்தமிழர்களின் கல்வியில் மொழி என்ன பங்கு வகிக்கிறது?
தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்பதற்காகத் தனித்தமிழ் என்ற கட்டுப்பாட்டுடன் வளர்ந்தோம். அதனால் தமிழ் வளர்ந்தது. ஆனால், அதன் மறுபக்கம் வேறு விளைவுகளைத் தந்தது. தமிழின் உயர்வையும், பிரச்னைகளையும் சிங்களவர்களிடம் எடுத்துச் சொல்ல, சிங்களம் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டோம். எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க அதை ஒரு வழிமுறையாகக் கையாண்டோம். சிங்களம் கற்றிருந்தால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு சிங்களர்களிடமும் எங்கள் பிரச்னைகளைக் கொண்டு சென்றிருக்க முடியும். அதேபோல், தொடர் யுத்தத்தால் ஆங்கிலத்தையும் சரளமாகக் கற்றுக் கொள்ள முடியவில்லை. இது எங்களுக்கு ஒருவகையில் இழப்பே. ஆங்கில ஊடகங்கள் கூட எங்கள் பிரச்னைகளை பெருமளவுக்குக் கண்டுகொள்ளாமல், பிராந்திய அளவில் சுருக்கி விட்டன.
எனவே அடுத்த தலைமுறை அதே தவறைச் செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். சர்வதேச மொழி ஒன்று அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். இப்போது ஆங்கிலம் கற்று வருகிறோம். ஊடகவியலாளராக அம்மொழி பெரிதும் கைகொடுக்கும்.
* தமிழகத்துக்கு கல்விச் சுற்றுலா வர என்ன காரணம்?
முக்கியமான காரணம் மொழி. என் தாய்மொழியிலேயே வெளிநாடு ஒன்றில் என் துறை சார்ந்த அறிவைப் பெற முடியும். வேறு எங்கு சென்றாலும் இதற்கு வாய்ப்பில்லை. இரண்டாவதாக இங்கு அதிக பத்திரிகைகள், ரேடியோ, காட்சி ஊடகங்கள் இருக்கின்றன. இத்துறை எப்படி வணிகரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும் செயல்படுகிறது என்பதைக் கற்றுக் கொள்ளலாம்.
ஒரு செய்தியை கலாச்சார ரீதியாக எப்படி தொடர்புபடுத்திப் பார்க்கலாம். எங்களைப் பற்றிய புரிந்துணர்வு இங்கு இருக்கிறது. எனவே, இங்கு வந்தோம். மேலும், சென்னைப் பல்கலைப் பேராசிரியர்களின் துறைசார்ந்த அறிவு எங்களுக்கு உதவும். மற்றுமொரு காரணம் பொருளாதாரம். குறைந்த செலவில் ஒரு வெளிநாடு செல்ல முடியுமென்றால், அது தமிழகமாகத்தான் இருக்க முடியும்.
* கல்வி முறை எப்படி இருக்கிறது?
யுத்தம் காரணமாக ஒரு வித அச்சம் இருந்தது. தற்போது மீண்டு வருகிறோம். நூலகங்கள் இருக்கின்றன. ஏற்கனவே சொன்னது போல், ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் தருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
