UPDATED : அக் 28, 2011 12:00 AM
ADDED : அக் 28, 2011 05:37 PM
பிரிட்டிஷ் கவுன்சில், வகுப்பறை இணைப்பு திட்டத்தின் கீழ், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அதன் கீழ் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு, சர்வதேச பள்ளிக்கான விருது வழங்கி கவுரவிக்கிறது.
எப்படி தேர்ந்தெடுக்கின்றனர்? இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியத்தில், எட்டு அரசுப் பள்ளிகளும், பூந்தமல்லி ஒன்றியத்தில், எட்டு அரசுப் பள்ளிகளும், கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டன. இணைய வசதியுடன் கூடிய வீடியோ கான்பரன்சிங், இ-மெயில் ஆகியவற்றின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள், இங்கிலாந்தில் தேர்வு செய்யப்பட்ட ஆரம்பப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, இரு நாட்டு கல்வி திட்டங்கள், கலாசாரம், பண்பாடு, உலகளாவிய முக்கிய விஷயங்கள் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
செயல்பாடுகள் அடிப்படையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும், தலா ஆறு பள்ளிகள் வீதம், 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கிடையே, தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகள் உட்பட, இரு ஒன்றியங்களில் இருந்தும், 40 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுடன், கலந்துரையாடல் மற்றும் பல்வேறு செயல்முறை அடிப்படையில், நான்கு ஆசிரியர்களை, பிரிட்டிஷ் கவுன்சில் தேர்வு செய்தது. அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி சிவநேசன் உட்பட நான்கு ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கண்ணப்பன், உமா ஆகியோர் அடங்கிய குழு, இங்கிலாந்து சென்று, லண்டனில் உள்ள பல்வேறு பள்ளிகளை பார்வையிட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், சென்னை வந்து, பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இங்கிலாந்து சென்று வந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகள் உட்பட, 12 பள்ளிகளுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில், கடந்த 20ம் தேதி, டில்லியில் நடந்த விழாவில், "சர்வதேச பள்ளி விருது" வழங்கப்பட்டது. இதை, மத்திய பிரதேச கல்வி அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் மற்றும் தமிழக தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில், இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ரிச்சர்டு ஸ்டாக் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
தலைமை ஆசிரியை சாந்தி சிவநேசன் கூறும்போது, "இங்கிலாந்தில் உள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு, உள்கட்டமைப்பில் மிகச்சிறப்பாக உள்ளன. கம்ப்யூட்டர், ஏசி&' வசதி இல்லாத வகுப்பறைகளே கிடையாது. 20 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற நிலை அங்கு இருக்கிறது" என்றார்.
இணை இயக்குனர் கண்ணப்பன் கூறும்போது, "இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளியும், கல்லூரி போல் இருக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள சி.சி.இ., முறை, இங்கிலாந்தில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது" என்றார்.
