தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தில் சர்ச்சை

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தில் சர்ச்சை

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தில் சர்ச்சை


UPDATED : அக் 29, 2011 12:00 AM

ADDED : அக் 29, 2011 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2011 12:00 AM ADDED : அக் 29, 2011 10:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனத்தில், விதிகள் மீறப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, 13 மாதங்களுக்குப் பிறகு, புதிய முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு, அரசுத் தரப்பிலும், ஆட்சி மன்றக் குழு தரப்பிலும், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடந்து 13 மாதங்கள் கழித்து, புதிய முதல்வர் நியமிக்கப்பட்டதற்கு கல்லூரி நிர்வாகம் சரியான காரணம் தெரிவித்தால் மட்டுமே, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, சிண்டிகேட் உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

சென்னையில், மிகவும் பிரபலமான பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஏ கிரேடு கல்லூரியாகும். இக்கல்லூரிக்கு, பல ஆண்டுகளாக நிரந்தர முதல்வர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு முதல்வர்கள் தான் நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.

தற்போதைய முதல்வர் கந்தசாமி நியமிக்கப்படுவதற்கு முன், காஞ்சி பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சேகர், பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன், ரவிக்குமாரும் பொறுப்பு முதல்வராகச் செயல்பட்டார்.

பச்சையப்பா அறக்கட்டளையில் உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாகவே, நிரந்தர முதல்வர் நியமிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாக, கல்லூரி பேராசிரியர்கள் சிலர் தெரிவித்தனர். இந்நிலையில், இக்கல்லூரி முதல்வரைத் தேர்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி நேர்முகத் தேர்வு நடந்தது. பச்சையப்பன் அறக்கட்டளையால், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், புதிய முதல்வர் யார் என அறிவிக்கப்படவில்லை. அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், புதிய முதல்வர் அறிவிக்கப்படவில்லை என கூறப்பட்டது.

இத்தேர்வு நடந்து 13 மாதங்கள் கழித்து, கடந்த மே 30ம் தேதி, கந்தசாமி நாயுடு கல்லூரியில், முதல்வராகப் பணிபுரிந்து வந்த கந்தசாமிக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பச்சையப்பன் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். கந்தசாமி இம்மாதம் இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற 4 மாதங்களே உள்ள ஒருவரை, புதிய முதல்வராக நியமித்தது ஏன் என, அப்போதே பேராசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், பி கிரேடு நிலையில் உள்ள கந்தசாமி கல்லூரி முதல்வரை, ஏ கிரேடு கல்லூரியான பச்சையப்பன் கல்லூரிக்கு முதல்வராக நியமித்தது ஏன் என்றும், அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இம்மாதம் 10ம் தேதி நடந்த சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், இந்த நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, கல்லூரி நிர்வாகத்திடம் உரிய விளக்கம் பெற்ற பிறகே, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என, சிண்டிகேட் கூட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. மேலும், அந்த விளக்கத்தின் அடிப்படையில், புதிய முதல்வர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதல்வர் நியமனம் தாமதமானதற்கு விளக்கம் அளித்து, பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில், பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த காரணங்களை பரிசீலித்து, கந்தசாமியின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில், அக். 29ம் தேதி (இன்று), பல்கலைக்கழக செனட் கூட்டம் நடைபெறுகிறது. செனட் கூட்டத்தில், இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்படுமா அல்லது அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என தெரியவில்லை. செனட் கூட்டத்தில், இப்பிரச்னை விவாதிக்கப்படாது என, பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் கூறும்போது, "புதிய முதல்வரைத் தேர்வு செய்துவிட்டு, ஓராண்டு காலதாமதமாக நியமனம் செய்தது ஏன் என்பதற்கு, கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்தால், இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது, கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்துள்ளது. எனவே, ஒப்புதல் அளிப்பதில் பிரச்னை இருக்காது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us