தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவர்கள் கிராமங்களில் அக்கறை காட்ட வேண்டும்: முதல்வர்

மருத்துவர்கள் கிராமங்களில் அக்கறை காட்ட வேண்டும்: முதல்வர்

மருத்துவர்கள் கிராமங்களில் அக்கறை காட்ட வேண்டும்: முதல்வர்


UPDATED : நவ 04, 2011 12:00 AM

ADDED : நவ 04, 2011 03:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2011 12:00 AM ADDED : நவ 04, 2011 03:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழக 22வது பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில் பங்கேற்று, முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பட்டமளிப்பு உரை: மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. கடந்த 2001-2006ல் நடந்த எனது ஆட்சியில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர பிரசவ வசதி செய்யப்பட்டது.

மேலும், ஒன்றியத்துக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் நவீன உபகரணங்களுடன் மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, பேறு காலத்தின் போது தாய்-சேய் இறப்பு வீதம் பெருமளவு குறைந்தது. மருத்துவ வசதிகள் வீட்டு வாயிலில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நடமாடும் மருத்துவமனை திட்டம் விரைவில் துவங்கப்படும். மேலும், தற்போதுள்ள 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ஆய்வக வசதிகளுடன் பலப்படுத்தப்படும்.

ஏழைப் பெண்கள் பேறு கால உதவித் தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதால், தாய் நலன் பேணப்படுவதுடன், குழந்தைக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வாங்க உதவியாக உள்ளது. நகர்ப்புறங்களில் குடிசை பகுதி மக்கள் பயனடைவதற்காக, 75 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
நவீன பரிசோதனைக் கருவிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

அரசு - தனியார் பங்களிப்புடன் எல்லா மாவட்டங்களிலும் கணினி உதவியுடன் செயல்படும் ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள "ஏ" பிரிவு கட்டடம் மருத்துவமனையாகவும் "பி" பிரிவு கட்டடம் மருத்துவக் கல்லூரியாகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ஏற்ற வகையில் உரிய மாற்றங்கள் செய்து, தேவையான டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட பின், இந்த மருத்துவமனை திறக்கப்படும்.

இச்சிறப்பு மருத்துவமனையில், டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) இணையாக எல்லா வசதிகளும் செய்யப்படும். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எமது அரசு அறிவித்துள்ள பல்வேறு சிறப்புத் திட்டங்களால், தமிழகம் மருத்துவத் துறையில் முன்னோடி மாநிலமாக திகழ வழி ஏற்படும்.

தரமான மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்வதில் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்காக (பெல்லோஷிப்) வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில், நாட்டிலேயே முதல் பல்கலைக்கழகமாக எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகம் சிறப்பு மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. இங்கு பட்டம் பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஜாதி, மத, இன பாகுபாடின்றி, மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு சேவையாற்ற நீங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

விழாவில், பல்கலைக் கழக வெள்ளி விழா விருந்தினர் மாளிகைக்கான அடிக்கலை, முதல்வர் திறந்து வைத்தார். மேலும், சர்வதேச தர நிர்ணய அமைப்பு, பல்கலைக் கழகத்துக்கு வழங்கிய "ஐஎஸ்ஓ 9001" சான்றை முதல்வர் ஜெயலலிதாவிடம், துணைவேந்தர் வழங்கினார்.

மொத்தம் 2,247 மாணவர்கள் பங்கேற்று பட்டம் பெற்றனர். முன்னாள் துணைவேந்தர் பிரமானந்தம், ஜீரண மண்டல மருத்துவ நிபுணர் பிரசன்னகுமார் ரெட்டி, நரம்பியல் மருத்துவ நிபுணர் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீனிவாஸ், இதய அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ்குமார் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை, பல்கலை வேந்தர் கவர்னர் ரோசய்யா வழங்கினார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா உட்பட 10 பேருக்கு, "வாழ்நாள் சாதனையாளர்&' விருது வழங்கப்பட்டது. சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் வழங்கி, முதல்வர் பாராட்டினார்.

துணைவேந்தர் மயில்வாகனன் வரவேற்று பேசும்போது, "பல்கலைக் கழக வெள்ளி விழா பரிசாக ஓமந்தூரார் தோட்டத்தில் அமையவிருக்கும் சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை, பல்கலைக் கழக சிறப்பு மருத்துவமனையாகவும், முதுநிலை கல்வி நிறுவனமாகவும் முதல்வர் அறிவித்து போதிய நிதி ஒதுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us