ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க மாநில அளவில் அரசு நிறுவனம்
ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க மாநில அளவில் அரசு நிறுவனம்
UPDATED : செப் 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அரசு பள்ளிகளில் நியமிக்கப்படும் இளங்கலை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, மாநில அளவில் ஓர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை ஏற்படுத்துவதற்கும், மண்டல அளவிலும் இதேபோல பயிற்சி நிறுவனங்களைத் துவக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக, மாநில அளவிலான பயிற்சி மையத்தை துவக்குவதற்கு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் 11வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் (2007- 2012) மேற்கொள்ளப்பட உள்ள செயல் திட்டங்கள் குறித்து, அதன் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வரும் 2015ம் ஆண்டுக்குள் 16 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், 2020ம் ஆண்டுக்குள் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் இடைநிலைக் கல்வியை அளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களுக்கு, மாநில அரசின் பங்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமெனில், தரமான ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கென்றே, மாநில அளவில் பிரத்யேகமான பயிற்சி நிறுவனம் ஏற்படுத்தப்படும். இதற்கு அடுத்து மண்டல அளவிலும் படிப்படியாக பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக மாநில அளவிலான பயிற்சி மையம் ஏற்படுத்த, ஐந்து கோடி ரூபாய் முன் மொழியப்பட்டுள்ளது. அரசு பொதுத் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் தர்மபுரி, விழுப்புரம், ஈரோடு, பெரம்பலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய எட்டு மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளன.
அதனால், இந்த மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வகையிலும் சிறந்த முன்மாதிரிப் பள்ளியை ஏற்படுத்தி, அதனை பிற பள்ளிகள் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாதிரி பள்ளித் திட்டம் படிப்படியாக துவங்கி, மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இடைநிலைக் கல்விக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ஆயிரத்து 626 கோடி 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.