பணியில் சேராத 254 ஆசிரியருக்கு பள்ளி கல்வித் துறை நோட்டீஸ்
பணியில் சேராத 254 ஆசிரியருக்கு பள்ளி கல்வித் துறை நோட்டீஸ்
UPDATED : செப் 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,156 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், கடந்த மாத இறுதியில் சென்னையில் கவுன்சிலிங் நடத்தி, அவர்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.
நியமன உத்தரவுகளைப் பெற்ற 1,156 பேரில், இதுவரை 902 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். 254 பேர் இன்னும் பணியில் சேராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
காலி ஆசிரியர் பணியிடங்களால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, உடனடியாக பணியில் சேருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும், தாங்கள் விரும்பிய இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னை குறித்து, பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பணி நியமனம் செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று உடனடியாக ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும். இதுவரை பணியில் சேராத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
ஓரிரு தினங்களில், அது அவர்களுக்கு கிடைத்துவிடும். 16ம் தேதிக்குள் அனைவரும் பணியில் சேர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவு, ரத்தானதாக முடிவெடுக்கப்படும்’ என்றார்.