பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்த தமிழக அரசு திட்டம்
பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்படுத்த தமிழக அரசு திட்டம்
UPDATED : நவ 14, 2011 12:00 AM
ADDED : நவ 14, 2011 09:58 AM
சிவகங்கை: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு நிதி உதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய பாடத் திட்டத்திற்கு இணையாக, சென்ட்ரல் பாடத்திட்டத்தில் கல்வி வழங்கும் பொருட்டு, பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் நிதியைப் பெற்று, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, அனைத்து அரசு, உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை, அறிவியல் ஆய்வுக்கூடம், குடிநீர், கழிவறை, விளையாட்டுத் திடல் வசதிகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிட விவரம், ஆசிரியர்களுக்குத் தேவையான வசதிகள் குறித்தும் விவரம் சேகரித்துள்ளனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதியை மத்திய அரசிடம் பெறுவதற்காக, விவரங்களை சேகரிக்கின்றனர். விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு, கட்டமைப்பு பணிகள் துவங்கும்" என்றார்.
