அமெரிக்காவில் ஆராய்ச்சி : அண்ணாமலை பல்கலை பேராசிரியர் தேர்வு
அமெரிக்காவில் ஆராய்ச்சி : அண்ணாமலை பல்கலை பேராசிரியர் தேர்வு
UPDATED : நவ 14, 2011 12:00 AM
ADDED : நவ 14, 2011 10:19 AM
சிதம்பரம் : உலக சுகாதார அமைப்பு சார்பில் அமெரிக்காவில் 10 மாதம் நடைபெற உள்ள மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்கு, அண்ணாமலை பல்கலைக் கழக இணை பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.நா., வின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பு, அண்ணாமலை பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறையில் இணை பேராசிரியராக உள்ள பார்த்தசாரதி என்பவரை, மார்பக புற்றுநோய் ஆராய்ச்சிக்காக தேர்வு செய்துள்ளது. இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், பல உயர்மட்ட ஆய்வுக்கு பின் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆராய்ச்சி, அமெரிக்கா பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் உள்ள டானாப்பார் புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் வரும் 16ம் தேதி துவங்கி 10 மாதங்கள் நடக்கின்றன.
பார்த்தசாரதி மேற்கொள்ள இருக்கும் இந்த ஆராய்ச்சிக்கான ஏற்பாடுகளை உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் பான் அமெரிக்கன் சுகாதார நிறுவனம், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய வெளியுறவுத் துறை, ஹார்வார்டு பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக் கழகம் இணைந்து செய்துள்ளன.
