எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவுகள் மீண்டும் நிறுத்தி வைப்பு
எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவுகள் மீண்டும் நிறுத்தி வைப்பு
UPDATED : நவ 15, 2011 12:00 AM
ADDED : நவ 15, 2011 03:17 PM
நீதிமன்ற உத்தரவுப்படி, இந்திய மருத்துவ கவுன்சில் விதியைப் பின்பற்றாமல், பல்கலைக் கழகத்தின் பழைய விதியைப் பின்பற்றியதால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீண்டும் தோல்வியடைந்தனர் என, மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ மாணவர் கூட்டமைப்பு இதுகுறித்து கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டில் அனாடமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய மூன்று பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துக்கும் முதல் தாள், இரண்டாம் தாள், வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு, இன்டர்னல் தேர்வு என, ஐந்து தேர்வுகள் உள்ளன. இதில், முதல் தாள், இரண்டாம் தாள் மற்றும் வாய்மொழித் தேர்வில், மொத்தம் 150 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்பது, இந்திய மருத்துவ கவுன்சில் விதி.
ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தில், கடந்த காலங்களில், முதல் தாள், இரண்டாம் தாளில், தலா 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், வாய்மொழித் தேர்வில், 50க்கு குறைவாக இருந்து, மொத்தத்தில் 150 இருந்தால், தேர்ச்சி என்றிருந்தது. இந்த விதியை, இப்போதைய துணைவேந்தர் மயில்வாகனன் மாற்றினார்.
அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள், வாய்மொழித் தேர்வு இந்த மூன்றிலும், தலா 50 மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி என விதி மாற்றப்பட்டது. இந்த புதிய விதியால், 1,300 மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தனர். இதை எதிர்த்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு, இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றுமாறு, பல்கலைக் கழகத்தை கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையில், "புதிய விதியை ரத்து செய்துவிட்டு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி தேர்ச்சி அளிக்கப்படும்" என, பல்கலைக் கழகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல், பல்கலைக் கழகத்தின் பழைய விதிப்படி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனால், முன்போலவே ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால், இது நீதிமன்ற அவமதிப்பு. மேலும், முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் அளிப்போம் என தெரிவித்தோம்.
இந்நிலையில், நவம்பர் 13ம் தேதி வெளியிட்ட தேர்வு முடிவுகளை திரும்பப் பெறுவதாகவும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி புதிதாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இவ்வாறு மாணவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
புதிய உத்தரவுப்படி, தேர்வு முடிவுகள் இருக்கக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தாமல், புதிய உத்தரவு அமலாகி உள்ளது. பின், தடாலடியாக முடிவுகள் பின்வாங்கப்பட்டுள்ளன.
தேர்வு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறியதாவது: எந்த விதியைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய விதி ரத்து என்றவுடன், ஏற்கனவே பல்கலைக் கழகம் பின்பற்றிய பழைய விதிப்படி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், முடிவுகள் திரும்பப் பெறப்பட்டன. பல்கலையின் பழைய விதி, இந்திய மருத்துவ கவுன்சில் விதிக்கு பொருந்துகிறதா என, இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசீலனைக்குப் பிறகு, புதிய தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்றார்.
