புதிய பள்ளிகளுக்கு அனுமதி: தமிழக அரசு மிகுந்த கவனம்
புதிய பள்ளிகளுக்கு அனுமதி: தமிழக அரசு மிகுந்த கவனம்
UPDATED : செப் 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விதிமுறைகளின்படி விண்ணப்பித்தால் மட்டும், மேல் நடவடிக்கைகளுக்கு முதன்மைக் கல்வி அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பின்விளைவுகளுக்கு சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமாள்சாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வரும் கல்வியாண்டில் (2009-2010) சிறுபான்மையினர் அல்லாத தனியார் உயர்நிலைப் பள்ளிகள் துவங்க அனுமதி கோரப்படும் விண்ணப்பங்களை, டிசம்பர் 31ம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்பிவைக்க வேண்டும். காலதாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவோ அல்லது புதிதாக உயர்நிலைப் பள்ளி துவங்கவோ அனுமதி கேட்டு விண்ணப்பித்தால், சம்பந்தபட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடியாக பள்ளிக்குச் சென்று பார்வையிட்டு, உரிய அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.
பள்ளிக்கான இடவசதி மற்றும் விளையாட்டு மைதானம் சார்ந்த நில ஆவணங்கள், எந்தெந்த சர்வே எண்களில் எந்தெந்த நிலம் உள்ளது போன்றவை குறித்த விவரங்கள், மாவட்டக் கல்வி அலுவலரின் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.
விளையாட்டு மைதானத்திற்கும், பள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு, பள்ளி துவங்க அனுமதி கோரும் இடமும், நில ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள இடமும் ஒன்றுதானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆவணங்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நன்றாக ஆய்வு செய்து, திட்டவட்டமான பரிந்துரை அறிக்கையை இணை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் முழுமையாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஏதேனும் விடுபட்டால் சம்பந்தபட்ட விண்ணப்பங்களை மாவட்ட அளவிலேயே நிராகரிக்க வேண்டும்.
பெரும்பாலான கருத்துருக்களில், பள்ளிக்கென குறிப்பிடப்படும் நில ஆவணங்கள், பள்ளியின் பெயரில் பதிவு செய்யப்படாமல் அறக்கட்டளை பெயரில் பதிவு செய்யப்படுகிறது.
அறக்கட்டளை பெயரில் இருக்கும் நில ஆவணங்கள் பல்வேறு பள்ளிகளுக்கு கணக்கு காட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அறக்கட்டளையால் ஏற்படுத்தப்படும் நிலமானது பள்ளியின் பெயரில் எந்த சர்வே எண்ணில் இருந்து, எந்த சர்வே எண் வரை உள்ளது என்ற விவரம், ஆய்வு அலுவலரால் திட்டவட்டமாக சான்றளிக்கப்பட வேண்டும்.
பள்ளிக்கான வரைபடங்கள் ஊராட்சி அளவில் இருந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். நகராட்சி எல்லைப் பகுதியாக இருந்தால், நகராட்சி கமிஷனரின் ஒப்புதல் பெற வேண்டும். பேரூராட்சியாக இருந்தால் அதன் செயல் அலுவலரிடமும், மாநகராட்சியாக இருந்தால் அதன் மேயரிடமும் ஒப்புதல் பெற வேண்டும்.
‘புளூ பிரின்ட்’டில் பள்ளி நிர்வாகியின் கையொப்பம் அவசியம் தேவை. கட்டட வரைபடத்தில் பள்ளியின் பெயர் இருக்க வேண்டும். வரைபடத்தில் பள்ளிக்குரிய நிலத்தின் சர்வே எண்ணை குறிப்பிடுவதோடு, சொத்து வாங்கியதன் நகலையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
குத்தகை நிலமாக இருந்தால் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு குத்தகை பெற்றிருக்க வேண்டும். அறக்கட்டளை நிதி, நிரந்தர வைப்புக் கணக்கில் பள்ளி செயலரின் பெயரில் ஏழு ஆண்டுகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
ஒரு சில மாவட்டங்களில் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்நிலைப் பள்ளிகள் துவக்கப்படுவதாலும், மாணவர் சேர்க்கை முடிந்த பின் பள்ளிகளைத் துவக்க அனுமதி கோருவதாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற பள்ளிகளில் சேரும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் எழுகின்றன. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளைத் துவக்குவதற்கு அனுமதி கொடுத்தப் பிறகே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இதையெல்லாம் கடைப் பிடிக்காமல் கருத்துருக்கள் பரிந்துரைக்கப்பட்டால், இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தபட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.