வகுப்பறை நேரத்தில், மரத்தடியில் அரட்டை அடித்த ஆசிரியர்கள்
வகுப்பறை நேரத்தில், மரத்தடியில் அரட்டை அடித்த ஆசிரியர்கள்
UPDATED : செப் 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: ‘வகுப்புக்கு மட்டம் போட்டு, மரத்தடியில் அரட்டை’ அடித்த ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை இயக்குனரிடம் சிக்கினர்.
தமிழக கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி, செப்., 11ம் தேதி, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு திடீர் ‘விசிட்’ செய்தார். அப்போது, ஆசிரியர்கள் பலர் வகுப்பறையில் இல்லாதது கண்டு, மாணவர்களிடம் விசாரித்தார்.
தலைமை ஆசிரியர் குறித்து கேட்டபோது, ‘மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் மீட்டிங்கில் கலந்து கொள்ளச் சென்றுள்ளதாக’ தெரிவிக்கப்பட்டது.
பள்ளியின் நிலைமை குறித்து பொறுப்பு தலைமை ஆசிரியரிடம் விசாரித்த இயக்குனர், ‘பள்ளிக்கு வந்தும் வகுப்பு நடத்தாத ஆசிரியர்கள்’ குறித்து விளக்கம் கேட்டார். சிலஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்களிடம் வகுப்பை ஒப்படைத்து விட்டு மரத்தடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் வந்துள்ளதை அறிந்ததும் மிரண்டனர். விரைந்து வகுப்பறைக்கு சென்றனர். ஆசிரியர்களில் சிலர், பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக, ‘கைடு’களை வைத்து பாடம் நடத்தியது குறித்து கேட்டார். பின், பள்ளிக்கு வந்து வகுப்பிற்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போது, பள்ளிகளில் வகுப்பறை நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வகுப்பறையிலும் நூலகத்தில் உள்ள புத்தகங்களை கயிறு கட்டித் தொங்கவிட வேண்டும். அங்கு அப்படி இல்லாததால், தலைமை ஆசிரியரை மொபைலில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். இயக்குனரின் திடீர் விசிட்டால் இப்பள்ளி ஆசிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.