UPDATED : செப் 12, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன், ஜூலையில் மாணவர் சேர்க்கை அதிகமாக நடைபெறும்.
இந்த காலகட்டத்தில் சேராத மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து, உடனடித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்கள், அதே கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு வசதியாகவும் ஆகஸ்ட் இறுதி வரை சேர்க்கை நடைபெறும்.
அதேபோல் நடப்பு கல்வியாண்டிலும் ஆகஸ்ட் இறுதிவரை மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கு துறை அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்வதற்கு வசதியாக, சேர்க்கைக்கான காலக்கெடுவை மேலும் ஒரு மாதம் நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத மாணவர்கள் பிளஸ் 1 சேர்வதற்கு முன்வந்தால், அவர்களுக்கு சேர்க்கை அனுமதியை வழங்க வேண்டும் என்றும், 30ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்றும் பள்ளி நிர்வாகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடந்துவரும் நிலையில், இனி புதிதாக சேரும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு பிரச்னை இருக்காது. அடுத்ததாக டிசம்பர் மாதம் நடைபெறும் அரையாண்டுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
ஆனால், தாமதமாக பள்ளிகளில் சேர்வதால், மூன்று மாதமாக நடத்தப்பட்ட பாடங்களை மாணவர்களே படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையும் எழுந்துள்ளது.