புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டத்திற்கு எதிர்ப்பு
புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டத்திற்கு எதிர்ப்பு
UPDATED : செப் 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஆமதாபாத்: ‘புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்’ என்ற குஜராத் அரசின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததால், அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘பள்ளி மாணவர்கள் இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்’ என, தெரிவிக்கப்பட்டது.
இப்புதிய முறை முதல்கட்டமாக 8,9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகமாகும் என்றும், அதன் பின் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரிய தலைவர் ரோகித் பதக், ‘ஆசிரியர் தினத்தை ஒட்டி நடந்த விழாவில் பேசிய முதல்வர் நரேந்திர மோடி, ‘புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்’ என, வலியுறுத்தினார்.
அந்த அடிப்படையில், இந்த புதிய முறை அறிமுகமாகிறது. இந்தத் திட்டத்தினால், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் பலன் அடைவர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களில் தோல்வி அடைவோரின் சதவீதம் குறையும்’ என்றார்.
இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நன்றாக படிக்கும் மாணவர்களும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்நிலையில், புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை, குஜராத் மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக அரசு தகவல் தொடர்பாளர் கூறுகையில், ‘புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து ஆலோசித்த பின்னரே அறிமுகம் செய்யப்படும்’ என, தெரிவித்தார்.