தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமதாஸ் புகாருக்கு முதல்வர் புள்ளிவிவர பதில்

ராமதாஸ் புகாருக்கு முதல்வர் புள்ளிவிவர பதில்

ராமதாஸ் புகாருக்கு முதல்வர் புள்ளிவிவர பதில்


UPDATED : செப் 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘இந்த ஆண்டு மட்டும் ஆறு அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது, வசதி படைத்தவர்களுக்காகச் செய்யப்படும் செயலா?’ என ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள ‘கேள்வி-பதில்’ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் உயர்க்கல்வித்துறை, வசதி படைத்தவர்களுக்கே வாழ்வளிப்பதாகவும், இரண்டு ஆண்டு காலத்தில் அதிக கல்லூரிகள் தொடங்கப்படவில்லை என்பதைப் போலவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
பொறியியல் கல்லூரிக் கட்டணம் 12 ஆயிரத்து 500 என்று இருந்ததை ஏழாயிரத்து 500 என்று குறைத்தது வசதி படைத்தவர்களுக்கா? அரசு சார்பில் இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏழு புதிய கலைக் கல்லூரிகள் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி மற்றும் மேட்டூர் ஆகிய சிறிய ஊர்களில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ராமதாசின் சொந்த ஊரான திண்டிவனம் மற்றும் விழுப்புரம், பண்ருட்டி, திருக்குவளை, பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய சிறிய ஊர்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதே. இது வசதி படைத்தவர்களுக்காகச் செய்யப்படும் செயல் என்கிறாரே? எந்த ஆட்சியில் ஒரே ஆண்டில் ஆறு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன?
அரசு சார்பில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு தொடங்கப்படுகின்றன. வசதியில்லாதவர்களும் தொழிற்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடு தான் அரசு சார்பில் இத்தனை கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.
தி.மு.க., ஆட்சியில் தனியார் கல்லூரிகள் பல்கிப் பெருகி இருக்கின்றன என்கிறாரே?
தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் இரண்டும் மத்திய அரசின் கீழ், குறிப்பாக அவரது மைந்தரின் பொறுப்பில் உள்ளவர்களால் அனுமதி அளிக்கப்படக் கூடியவை. தனியாருக்கு தரக்கூடாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமானால், அவர் தன் மகனிடமே கூறி தடுத்திருக்கலாம்.
ஐந்தாண்டு கால மத்திய ஆட்சியில் அகில இந்திய அளவில் எத்தனை புதிய மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரத்தைக் கொடுத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
பொறியியல் கல்லூரிகளை தனியாருக்கு அதிகமாக வழங்கியதால் வசதியானவர்களுக்குத் தான் உதவி என்பது எப்படி பொருத்தம்? ஒரு பொருள் பற்றாக்குறை இருக்கும்போது விலை ஏறும்; பற்றாக்குறை இல்லை என்றால் விலை குறையும் என்பது சாதாரண பொருளாதார தத்துவம்.
மேலும், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ., தான் அனுமதி வழங்குகிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மத்திய அரசின் என்.சி.டி.இ., தான் அனுமதி கொடுக்கிறது.
உயர்க்கல்வியை பரவலாக்கி அனைத்து மக்களுக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்க தி.மு.க., அரசு தவறிவிட்டது என்கிறாரே ராமதாஸ்?
தி.மு.க., அரசு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. தொழிற்கல்வியில் சேர தகுதி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. 2006-07ம் ஆண்டில் பொறியியல் கல்வியில் கிராமப்புறங்களில் இருந்து 24 ஆயிரத்து 670 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். 2007ம் ஆண்டு 34 ஆயிரத்து 69 மாணவர்களும், இந்த ஆண்டு 50 ஆயிரத்து 58 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
இது உயர்க்கல்வியைப் பரவலாக்கியதற்கான அடையாளம் இல்லை என்கிறாரா? 2005-06ம் ஆண்டில் கலைக் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 68 ஆயிரத்து 226. கடந்த ஆண்டில் ஆறு லட்சத்து 74 ஆயிரத்து 486.
கடந்த 2005ம் ஆண்டு 610 இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்கியதால், 2008ம் ஆண்டு இரண்டாயிரத்து 565 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கிறிஸ்தவர்கள் 2005ல் 861 ஆக இருந்தது.
இந்த ஆண்டு இரண்டாயிரத்து 757 பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 2005ம் ஆண்டு ஏழாயிரத்து 50 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு 18 ஆயிரத்து 616 பேர் வாய்ப்பு பெற்றுள்ளனர். எது எப்படியோ, இந்த புள்ளிவிவரங்களை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்த ராமதாசுக்கு நன்றி. இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us