UPDATED : செப் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சத்துணவு உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தின உரையாற்றும்போது, சத்துணவு சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் போன்றோருக்கு தனியான காலமுறை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதன்படி, அண்ணாதுரை பிறந்தநாளான செப்., 15ம் தேதி, இவர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மாதம் ஒன்றுக்கு 1,040 ரூபாய் தொகுப்பூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை-2 மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சிறப்பு கால ஊதிய விகிதமாக ரூ.500-10-600-20-800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதம் 1,380 ரூபாய் தொகுப்பூதியம் பெற்றுவரும் அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை-1 மற்றும் சத்துணவு சமையலர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதிய விகிதமாக ரூ.660-15-810-20-1010 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, சமீபத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டு மாதம் 2,070 ரூபாய் பெற்றுவரும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக ரூ.975-15-1125-1325 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றிவரும் சத்துணவு அமைப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்கனவே சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவருகின்றனர்.
இவர்களில், 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவோரும், தற்போது பணியில் சேர்ந்தோரும் ஒரே ஊதியம் பெறும் நிலை உள்ளதால், பணி மூப்பு அடிப்படையில், பணியில் சேர்ந்த நாள் முதல் பத்தாண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கு ஓர் ஊதிய உயர்வு வீதம் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து பணியாளர்களுக் கும் சிறப்பு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை -2, சமையல் உதவியாளர்கள் ஆகியோருக்கு மாதம் 500 ரூபாயும், அங்கன் வாடி உதவியாளர்கள் நிலை-1, சமையலர்கள் ஆகியோருக்கு மாதம் 600 ரூபாயும், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் 700 ரூபாயும் சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல், பணியில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு பணியாளர்களுக்கு, அவர்கள் பணி ஓய்வு பெறும்போது அளிக்கப்படும் சிறப்பு வருங் கால வைப்பு நிதி மற்றும் பணிக் கொடையாக அளிக்கப்படும் தொகை மற்றும் ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும் ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் தவிர கூடுதலாக தனியாக வழங்கப்படும்.
