தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரிகளின் ஆசிரியர் நேர்முகத் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

கல்லூரிகளின் ஆசிரியர் நேர்முகத் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்

கல்லூரிகளின் ஆசிரியர் நேர்முகத் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம்


UPDATED : செப் 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
ஆசிரியர் நியமனங்களுக்கான நேர்முகத் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் அழைக்கப்பட்ட நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு இரண்டு பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் ஆசிரியர் நியமனங்கள் இரண்டு விதமாக நடந்துவருகின்றன. பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்குத் தேவையான ஆசிரியர்கள், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின்கீழ் நியமிக்கப்படும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனங்களில் முதலில் ஒரு பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அந்த முறையில் நடந்த நேர்முகத் தேர்வுகளில் ஏராளமானோர் பங்கேற்கவில்லை. பல பேர் ஏற்கனவே அரசு வேலைகளில் இருப்பதாலும், வேறு பல காரணங்களாலும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்தது.
அதனால், புதிய ஆசிரியர்களை குறித்த காலத்திற்குள் நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பூர்த்தி செய்யப்படாத இடங்களுக்கு மீண்டும், மீண்டும் புதிய விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி நியமனம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்னை காரணமாக, ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
பதிவு மூப்புப்படி முதல் நபர் தகுதி பெற்றிருந்தால் அவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அவர் வரவில்லை என்றாலோ அல்லது வேறு காரணங்களால் தகுதி பெறவில்லை என்றாலோ இரண்டாவது நபர் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டார்.
இந்த முறையில் தான் சமீபத்தில் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் நேர்முகத் தேர்வு முறையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆறாயிரத்து 500 பட்டதாரி ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக சில மாவட்டங்களில் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பழைய முறைப்படி என்றால், ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் 32 ஆயிரத்து 500 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், இரண்டு பேர் வீதம் 13 ஆயிரம் பேருக்கு மட்டும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பதிவு மூப்புபடி ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் பெயர் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க, முதல் இரண்டு பேரை மட்டும் அழைத்துள்ளோம்.
ஐந்து பேரையும் அழைத்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை நடத்தினால், விரைவாக பணியை முடிக்க முடியாது. அதனால் இரண்டு பேரை மட்டும் அழைத்துள்ளோம். முதலாவது நபர் வரவில்லை என்றால் இரண்டாவது நபர் தகுதி பெற்றுவிடுவார். இரண்டு பேரும் கலந்துகொள்ளாத பட்சத்தில், மூன்றாவதாக உள்ள நபர் அழைக்கப்படுவார்.
அதுபோன்ற நிலை ஏற்படாது என்று எதிர்பார்க்கிறோம். எனவே சான்றிதழ் சரிபார்த்தல் பணிகளை விரைந்து முடித்து, இம்மாத இறுதிக்குள் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us