இன்ஜி., கல்லூரி முதல்வர்களுடன் அண்ணா பல்கலை ஆலோசனை
இன்ஜி., கல்லூரி முதல்வர்களுடன் அண்ணா பல்கலை ஆலோசனை
UPDATED : செப் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் மிரட்டப்படும் புகார் குறித்து, அக்கல்லூரி முதல்வர்களுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களின்கீழ் 354 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 131 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளின் முதல்வர்களுடன் சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், அக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
சில தனியார் பொறியியல் கல்லூரிகளில், நிர்வாகத்தினரால் மாணவர்கள் பல சமயங்களில் மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கல்லூரிகளில் உள்ள குறைபாடுகள் குறித் தும், அதிக கட்டணம் வசூலிப்பது குறித்தும் கேள்வி எழுப்பும் மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர், அடியாட்களை கொண்டு மிரட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் சில கல்லூரிகளில் மாணவர்கள், மாணவிகளுடன் பேசுவதற்கு கூட தடை விதிக்கப்பட்டு, அவற்றை மீறுபவர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கல்லூரி பஸ்சை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களை பயன்படுத்தும் மாணவர்களும் சில கல்லூரிகளில் மிரட்டப்படுகின்றனர். இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.
இத்தகைய புகார்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை; தேவையான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லை என்ற புகாரும் இருந்து வருகிறது.
இதுகுறித்தும், அக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பல்கலைக் கழகத்திடமிருந்து, தனியார் பொறியியல் கல்லூரிகள் எத்தகைய உதவிகளை எதிர்பார்க்கின்றன என்பது குறித்தும் கேட்கப்பட உள்ளது. கடந்த ஏப்ரல்/மே மாத செமஸ்டர் தேர்வில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக இருந்தது. 49 கல்லூரிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
இதுகுறித்தும், ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளன.
